பாலையில் தொலைந்த பருவம்
காதலின் வலி தெரியாமல்
கடல் கடந்து போனவனே ..
எதை பெறுவதற்காய்
எங்களை தனித்துப்போனாய் ..?
பாலை மண்ணிலா
பாசத்தை தேடிக்கொண்டிருகிறாய்..?
மனைவியின் சுகம்
மக்களின் மழலை பேச்சு
எத்தனை ரியால் கொடுத்தாலும்
எங்ஙனம் கிடைக்கும் ...?
வருடக்கணக்கில்
வாலிபத்தை தொலைத்தாயே
வற்றிப்போன உன் இளமை
வந்துவிடுமா?
கைபேசியில் முத்தமிட்டால்
காமம் தீர்ந்துவிடுமா ??
நீ அனுப்பிய பணத்தில்
வங்கி கணக்கு நிறைந்திருக்கிறது..
ஆனால்
காதல் பெட்டகம் என்னவோ
காலியாகத்தான் இருக்கிறது ..
உன் குரலை மட்டும் கேட்டு
குழந்தைகள் உன்னை
அப்பாவென அங்கீகரிக்க
நீயென்ன சிம்பொனியா ??
விதை மட்டும் போட்டு விட்டு
விருக்கென்று போனாய் ..
வளர்த்த செடியின்
வாட்டம் தெரியாதா உனக்கு?
போன மாதம் பேசும் போது
என்ன வேண்டும் என்று கேட்டாய்
வளையலா? மோதிரமா?
உடுத்திக்கொள்ள நான் கேட்பது
உன்னைத்தானென்று
உனக்கேன் புரியவில்லை ?
அம்மாவுக்கு உன் பாசம் போதும்
அக்காவுக்கு உன் பணம் போதும் ..
எனக்கு எல்லாம் நீயென்பதை
ஏன் மறந்தாய்!!
மரக்கட்டையாக வாழவா
மனுசியாய் ஜென்மம் எடுத்தேன்?
வெளிநாட்டு வாழ்க்கை
வேண்டாம் நமக்கு ...
விறகு வெட்டியாவது
உனக்கு விருந்து வைக்கிறேன் ..
விரைந்து வா ..!
கால்வயிற்று கஞ்சிக்காக
இழந்தது போதும் ...
மிச்சமிருக்கும் நாட்களையாவது
முத்தங்களால் எச்சம் வைப்போம் ...!!!
உன் அபிரேகா ..