சொல்லாமலே...

காதோரம் ஓர் பாட்டு
காற்றில் தவழ்ந்து வந்து- என்
காதுகளில் விழுந்தது
காதலர் தின பாடல்

காதல் எனும் சொல்லை
நானும் சொல்லவில்லை
சொல்லவந்த நேரம் காதல்
எந்தன் கையில் இல்லை

ஆமாம் இது எனக்கான பாடல்
ஆண்டுகள் பல கடந்து- என்
ஆழ்மனதை அசை போட்டேன்
ஆர்ப்பரித்தது எனது உள்ளம்

அப்போது எனக்கு ஆறு வயது
அன்று பாடசாலைக்கு முதல் நாள்
அம்மாவோடு போயிருந்தேன்
அவளும் வந்திருந்தாள்

கட்டை குட்டி தான்
கருப்பு நிறமும் கூட
கற்றை மயிர் சுருண்டிருக்க
கச்சிதமாய் நின்றிருந்தாள்

அம்மாவின் சேலை பின்னே
அமைதியாக ஒழிந்து கொண்டும்
அழுவதோடு மறுத்துக் கொண்டும்
அடம்பிடித்துக் கொண்டும் சிறார்கள்

இங்கே மட்டும் என்ன?
இருக்கவே மாட்டேனென்றேன்
இவள் மட்டும் சிரிக்கிறாளே
இப்போதே பிடித்தது அவள் குணம்

ஆண்டுகள் கடந்து எமக்குள்
ஆண் பெண் பேதம் வந்த போது
ஆசையொன்று என் மனதில்
ஆழப் புதைந்திட்டது

இது தான் காதலா?
இனங்காண தெரியா வயது
இருவருக்கும் சரி வருமா?
இது வேறு குழப்பம் எனக்குள்

படிப்பில் அவள் புலியென்றால்
பதுங்கும் பூனை நான்
பட்டத்து ராணி அவள் என்றால்
படைக்களம் நானென்பேன்

எனக்குள்ளே குழப்பம் இருந்திருக்க
எதையுமே காட்டாமல்
எல்லோரும் போல் இருந்திடுவேன்
எனது நாள் வரும் வரையில்

அன்றொரு நாள் காலை நேரம்
அந்த செய்தி நான் கேட்டேன்
அவள் இனிமேல் பள்ளி வர
அனுமதியே இல்லையாமே

வேலையிலே அப்பாவுக்கு
வேற்றூருக்கு மாற்றமாமே
வேதனையாய் போனாளாம்
வேறேதோ பள்ளியாமே

என்னை சொல்ல வெண்டும்
எனக்கு அன்றைக்கு காய்ச்சல்
எழும்பவே முடியவில்லை
எனக்கு அன்று விடுமுறை

காய்ச்சலொன்று வந்து- என்
காதலையும் பிரித்திட்டதே
காரிருள் ஆனது உலகம்
காயமதும் மறந்து பொனேன்

அவளிடத்தில் இருந்து ஒன்றும்
அங்கு செய்தி வரவேயில்லை
அங்கேயும் இங்கேயும்
அலைந்திட்டேன் அவளுக்காக

இருந்தும் ஒன்றும் பலனில்லை
இங்கிருக்கும் போதில்லெல்லாம்
இருக்கும் காதல் மறைத்து விட்டு
இப்போது அழலாமா?

என்னாலே முடியவில்லை
எனக்கென்று யாருமில்லை
என்று நான் அவளை காண்பேன்?
என்றென்றும் புலம்புகின்றேன்!

எழுதியவர் : ரா. அச்சலா சுகந்தினி. (14-Jan-13, 8:58 pm)
Tanglish : sollaamale
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே