மறந்தும் மறந்துவிடாத மர்மயோகி........ !

போலியாய்
போய்க்கொண்டிருக்கிறது
பொறாமைகள் சூழ்ந்த உலகில்
பொய்களால் பிழைக்கும் மனிதவாழ்வு !

நானிலத்தில்
நான்கண்ட கோளாறுகள்
நாட்களோடு கைகோர்த்தபடியே
நரக வேதனைகளாகவே தொடர்கிறது !

நல்லிணக்கங்களும்
நடைகூனித் திரிகின்ற
நயவஞ்சகர்களின் செயல்களில்
நரித்தனங்களும் மிக மலிவாகிவிட்டது

வழிகாட்டும்
வல்லவர்களோ சிலர் !
வஞ்சனைகளை வற்றாது
வாரி வழங்குபவர்களோ பலர் !

ஆயினும்
அண்டத்தின்பால்
அளவற்ற பிரியமுடன்
ஆவி என்னுள் சிலிர்க்கிறது !

இருகண்களுக்குள்
இருக்கும் பார்வையை
சிலமுறை இழந்துவிடுகிறேன்
சிறையாகிவிட்ட பிறவி இதனில் !

எனவே
என்னுள் உண்டான
எதிர்விளைவோ உடன்பாடாய்
எழுப்பிய நிகழ்வுகளை உணரும்போது ,

அகத்துள்
அணையாமல்
ஆன்ம ஞானமானது
அகல் தீபமாக சுடர்விடுகிறது !

அறியாமைகள்
அனைத்தும் அதன்முன்
அமிழ்ந்து மறைவதெனக்கு
அப்பட்டமாகவே விளங்குகிறது !

எனினும்
என்னை நேர்படுத்தி
நெறிமுறைகளை வகுக்கும்
நெருப்பின் தன்மையோ சாந்தமானது !

ஒற்றைவழியில்
ஒருமுகப்படுத்தப்படும்
சிந்தனைகள் சீர்கேடுகளின்றி
சீரியமுறையில் நடைபோடுகிறது !

அப்பாற்பட்ட
அற்புதங்களைத் தேடி
நாளும் ஓடிக் களைப்பதில்
நான் அடைந்திடும் சுகம் அலாதி !

போதிமரம்
போய்ச்சேர நேரமில்லை
மனோபாவங்கள் ஒன்றுகூடி
மதியூக மண்டபத்தில் தியானிக்கிறது !

ஒளிவட்டம்
ஒலியதிர்வுகளுடன்
நெருங்கிக் கொண்டிருக்கையில்
நெகிழ்ச்சியில் நோக்கங்கள் பிரகாசிக்கிறது !

யோகங்ளை
யோசிக்கக்கூடிய நிலைகளில்
மறந்தும் என்னை மறந்துவிடாத நான்
மௌன யாகம் வளர்க்கின்ற மர்மயோகி !

எழுதியவர் : புலமி (14-Jan-13, 8:30 pm)
பார்வை : 259

மேலே