நம்மைச் சுற்றி பகுதி -1
பிச்சைக்காரர்கள் !
***************************
"இந்த நாட்டில் பிச்சை எடுப்பதும் ,பிச்சை போடுவதும் குற்றமாக்கப்பட வேண்டும்"
-- தந்தை பெரியார்.
இது சாத்தியமா? ஏன் சாத்தியப் படாது? சாத்தியப் படாதவைகளை சாத்திரங்கள் வேண்டுமானால் சொல்லும்.சான்றோர்கள் சொல்வதில்லை.எனவே பெரியார் சொன்னது சாத்தியம்தானே!
ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?போடுவதற்கு ஆள் இருப்பதால். ஏன் போடுகிறார்கள்? எங்களுக்கு மனது இருக்கிறது போடுகிறோம்,என்பார்கள்.
உண்மையில் நாம் நல்ல மனது இருப்பதால் மட்டுமா பிச்சை போடுகிறோம்? ஒன்று பிச்சை கேட்கும் அவர்களின் தொந்தரவுக்காகப் போடுவோம்.இல்லையெனில்,நமக்கு வேண்டாத பொருள்களைத் தூக்கிக் குப்பையில் போட மனது வராமல் அதற்கென ஆள் தேடி அவரைப் பிச்சைக் காரராக மாற்றுகிறோம்.நாம் யாருமே நம் உபயோகத்தில் உள்ள பொருள்களைத் தானம் தர விரும்புவதில்லை.முடிந்த வரை பயன்படுத்தவே
முயல்கிறோம்.இல்லையெனில் குளிர் பதனப் பெட்டி தேவைப் பட்டிருக்காதே!
இப்படி அவர்களை சோம்பேறிகளாக்கி வைத்திருப்பதில் நம் தவறும் இருக்கிறதல்லவா?
இப்படி பிச்சைக்காரர்களாகி விட்டவர்களின்
வாழ்க்கை எப்படி இருக்கிறது? சற்றே நெருங்கிப் பார்த்ததில்(படித்ததில்) தலை சுற்றிப் போனேன்.
கோவையைப் போன்ற ஒரு நல்ல நகரத்தில் உள்ள ஒரு பிச்சைக்காரர் நாள் ஒன்றுக்குக் குறைந்தது முன்னூறு ரூபாய் சம்பாதிக்கிறார்.ஒரு குடும்பத்தில் நான்கு பேர் பிச்சை எடுப்பதாகக் கொண்டால் அவர்களின் மாத வருமானம் குறைந்தது முப்பத்தைந்தாயிரம் ரூபாய்.நம்ப முடிகிறதா? நிறைய பேர் செல்போன் வைத்திருக்கிறார்கள். ஏறக் குறைய அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.(சமீபத்தில் கோவை பேருந்து நிலையத்தில் இறந்து போன ஒரு அனாதைப் பிச்சைக்காரரின் பையில் 78000 ரூபாய் பணமும் ஒரு லட்சம் ரூபாய் வங்கிக் கணக்குப் புத்தகமும் இருந்தது)
ஒரு வேலையும் செய்யாமல் மாதம் 9000 ருபாய் சம்பாதிக்க உங்களால் முடியுமா? இந்த 9000 ரூபாய் சம்பாதிக்க நம் வீட்டுப் படித்த (பி இ,எம்.பி.ஏ,எம்.சி.ஏ) பிள்ளைகள் படும் பாடு உங்களுக்குத்த் தெரியுமா?
அதிகாலை எழுந்து உடைகள் திருத்தி ,கழுத்துப் பட்டை ,காலணிகள் அடையாள அட்டை அணிந்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் எத்தனை பேரைக் கரைத்து இந்த பணத்தை சம்பாதிக்கிறார்கள்?
இதே அளவு பணத்தைக் கொடிகளைக் கோவணமாகவும்,போஸ்டர்களைப் போர்வைகலாகவும் அணிந்து வாழும் பிச்சைக்காரர்கள் 'அம்மா!,அய்யா!,அப்பா!' என்ற ஒரு சில வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் மிக எளிதாக சம்பாதிக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
எனவே தான் பிச்சைக் காரர்கள் சங்கம் வைத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள்.
போதாக் குறைக்கு நமது அரசாங்கம் வேறு ஏகப்பட்ட இலவசங்களை வாரி வழங்கி,மக்களை மண் பொம்மைகளாகவே வைத்திருக்கின்றன.அப்போதுதானே அடுத்த தேர்தலில் கரைத்து மாற்றுருக்கலாக மாற்ற முடியும்.என்ன செய்வது ? அவர்களும் ஓட்டுப் பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்கள்தானே!
கோவில்களில் வழங்கப் படும் அன்னதானத் திட்டத்தில் சாப்பிடும் நிறைய பேர் ,உழைக்கவே விரும்பாத சோம்பேறிப் பிச்சைக் காரர்களாகவே இருக்கிறார்கள். இந்தத் தேவையில்லாத அதிகப் பணத்தால் நிறையப் பேர் குடித்துக் கும்மாளமிட்டு பேருந்து நிலையங்களிலும் ,பொது இடங்களிலும்,அசிங்கமாக நடக்கின்றார்கள்.
இதற்கெல்லாம் என்ன தீர்வு?பெரியார் சொன்னதை செய்து பார்த்தால்தான் என்ன?
(கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன)