அலகுகளால் செதுக்கிய கூடு.

அலகுகளால் செதுக்கிய கூடு.

நீங்கள் நினைக்கலாம்
வெறும் ஈர்க்குகளும்,சுள்ளிகளும் என்று
ஆனால் பிரித்தெறிந்தது
ஒரு வாழ்க்கைக்கு போதுமான
ஒட்டுமொத்த என் உழைப்பு

உங்களுக்கு தெரிந்த வகையில்
குறுகிய வட்டத்திற்குள் வசித்தாலும்
எனது விருட்சம் மிக விசாலமானது
வேர்களும்,இலைகளும்,கிளைகளும்,
பூக்களும்,காய்களும்,கனிகளும்
பிரபஞ்ச ஜீவிதமும் ஆனதது

வானம் முழுக்க எனக்கு வசப்பட்ட
எனது சுதந்திரத்தை
அறிந்துணர கூட உங்களிடம்
அனுபவமோ,ஆளுமையோ இல்லை
அது எனக்கே உரித்தான இசம்

கனவுளை சிதைப்பதென்பது
உங்களுக்கு சாதாரணம்
எனக்கது சதா ரணம்
சுருக்கமாய் சொல்வதென்றால்
நீங்கள் சந்தர்ப்ப வாதிகள்
சந்தேக சாதிகள்
அடுத்தவரை அழவைத்தே பழகிய
பரம்பரையில் வழித்தோன்றல்களாகவே
இன்னமும் வாழ்கிறீர்கள்

தேன் கூடுகளை கலைப்பதில்
நீங்கள் எடுக்கும் கவனம்
அதன் ஆக்கத்திற்கான
சிரமத்தை ஆராய ஒருபோதும்
சிரத்தை எடுத்ததில்லை
முரட்டு கோடாரிகள் கொண்டு
நீங்கள் வீழ்த்தியது
வெறும் மரமொ,கூடோ அல்ல...,
இசை கவிழ்ந்து நிழல் விரியும்
ஒரு தோப்பை
புள்ளினங்கள் இனம்பெருக்கும்
பெரும் வீட்டை
அவைகளின் வம்சத்தின் வரலாற்றை

காலத்தை திரும்பிப் பார்த்து
கை சேதங்களை கணக்கிடும்போது
நிராயுத பாணிகளாய் நிற்பீர்கள்
எதுவுமற்று எதிலியாய்
குற்றவாளி கூண்டில்!

அப்போது நான் அலகுகளால்
தயார் செய்து கொண்டிருப்பேன்
இன்னொரு கூட்டை வேறொரு கிளையில்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (23-Jan-13, 9:11 pm)
பார்வை : 2746

மேலே