வீணையடி நான் உனக்கு...!

காலையிலேயே எழுந்திருந்தேன். வாட்ச் துல்லியமாய் காலை 4 ஆக இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறது என்று சொன்னது. மாலதி ஆழமான தூக்கத்திலிருந்தாள். முகம் கழுவி விட்டு கண்ணாடியைப் பார்த்தேன்....முன் நெற்றியில் வந்து விழுந்திருந்த ஏழெட்டு முடிகளில் நாலைந்து நரைத்துப் போயிருந்தது. துண்டை எடுத்து முகத்தை எழுந்த துடைத்தபடி பால்கனிக்கு வந்தேன்.
ஆழமான கருமையாய் வசீகரமாய் இருந்த வானத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்களுக்கு குட்மார்னிங் சொல்லி சிரித்தேன்...பதிலுக்கு அவையும் மெல்ல என்னை பார்த்துக் கண்ணடித்தன....! எவ்வளவு வேகமாய் ஓடி விட்டது காலம்....! நேற்றுதான் திருமணம் ஆனது போல தோன்கிறது, சடக்கென்று 17 வருடங்கள் ஓடி விட்டது. காலக் கணக்கின் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க ஒரு பிள்ளை பத்தாவது படிக்கிறான். பக்கத்தில் இருந்தால் செல்லம் கொடுத்து கெடுத்து விடுவேன் என்று அடிக்கடி மாலதி புலம்பி, புலம்பி இப்போது அவன் சென்னையிலிருக்கும் ஒரு நல்ல பள்ளியின் விடுதியில் தங்கிப் படிக்கிறான்..
என்னுடைய இந்த நாப்பத்தைந்து வயது என்னை வெகுவாகவே நிதானப்படுத்தியிருக்கிறது என்பதற்கு காரணம் மாலதியும்தான்...! திருமணம் ஆவதற்கு முன்பு நான் இருந்த வேகம் எல்லாம் இப்போது இல்லை. வயதாகிக் கொண்டிருப்பதும் ஒரு காரணம்.. என்றாலும் ஒவ்வொரு நாளாய் என் கனவுகள் எல்லாம் எனக்குள்ளேயே புதைந்து போனதும் ஒரு காரணம்தான்.
வாழ்க்கை எப்போதும் நமக்கு உள்ளே இருப்பதைப் போல வெளியேயும் அமைந்து விடுவதில்லை. சரியான மனிதர்களை திருமணம் செய்ய முடிகிறது ஆனால் மனோநிலைகள் வெவ்வேறு விதமாகத்தான் அமைந்து போய் விடுகிறது. திருமண வாழ்க்கையில் யாராவது அட்ஜஸ் செய்து கொண்டு போக வேண்டும் என்று சொல்வார்கள்...அது நூற்றுக்கு நூற்று பத்து சதவீதம் உண்மை.
நான் விட்டுக் கொடுக்க ஒன்றுமே என்னிடம் இல்லை. ஒரு அலுவலத்தின் சீஃப் எக்ஸ்யூட்டிவ் ஆபிசர் என்ற வசீகரம் மாலதிக்கும், பெரும்பாலும் என்னைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் என்றால் எனக்குச் சுத்தமாக அது பிடிக்காது. அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். பத்தாம் வகுப்பு படிக்கும் போது இருந்து டைரி எழுதிக் கொண்டிருப்பேன். ஏதோ ஒன்றை கிறுக்க வேண்டும் எனக்கு.
கல்லடிக்கு பயந்து ஓடும் நாய், கடும் வெயிலில் வண்டி இழுக்கும் எருதுகள், மழையில் நனைந்த படி சிறகுகள் ஒட்டிப் போய் உள்ளிருக்கும் வெள்ளை இறகுகள் தெரிய நொண்டி நடக்கும் காகம், பெற்றோர்கள் அடிக்கையில் கதறி அழும் குழந்தை, பேருந்து நெரிசலையும் தாண்டி அதற்குள் நகரும் வாழ்க்கை, சாலை ஒரங்களில் குடித்தனம் நடத்துபவர்களின் வாழ்க்கை, இப்படி என்னை சுற்றி நடக்கும் எல்லாவற்றுக்குள்ளும் நான் என்னை புகுத்திக் கொள்வேன்.
சென்னை பாரிஸ்கார்னர் என்.எஸ்.ஸி போஸ் ரோடுக்கு பின் புறம் இருக்கும் மின்ட் பக்கம் மாலை வேளைகளில் நெரிசல்களுக்குள் சுற்றியிருக்கிறேன். ரோட்டு ஓரம் சோற்றுக் கடை போட்டு விற்கும் அம்மாக்களின் கைகளால் தட்டு நிறைய சோறும், பொறித்த மீனும், மணக்கும் மீன் குழம்பும் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு ஓரமாய் அந்த பிளாட்பார்மில் உட்கார்ந்து அங்கே இழையோடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை அணு அணுவாக ரசித்திருக்கிறேன். ஆட்டோ ஓட்டுபவர்களும், மீன்பாடி வண்டி ஓட்டுபவர்களும் சராசரி குடிமகன்களும் அன்றைய தினத்தின் அலைச்சலை மறந்த படி உற்சாகமாய் ஏதேதோ பேசி சிரித்து, கோபப்பட்டு என்று ஒரு விதமான வாழ்க்கை அங்கே நடந்து கொண்டிருக்கும்...
" இன்னாடா துட்டு இல்லியா....இல்லாங்காட்டி நாளைக்கு கொடு...இப்ப வா சோறு துன்னு...." என்று கோபமாய் பேசியபடி அந்த சோறு விற்கும் அம்மா மிரட்டியபடி யாராவது காசில்லை என்று நிற்பவர்களுக்கு சோறு போடுவதை அடிக்கடி பார்த்திருக்கிறேன்....
அதே பிளாட்பாரம் ஓரமாய் ஏதோ ஒரு ஆலமரமோ அல்லது அரசமரமோ அந்த நெரிசல் வாழ்க்கைக்கு ஏற்றார் போல அடக்கமாய் வளர்ந்திருக்கும். அதன் அடியில் ஒரு பிள்ளையாரோ அல்லது நாகத்தம்மனோ சிலையாய் அமர்ந்திருப்பார்கள். அந்த மரத்தைச் சுற்றி பிளாட்பாரத்தில் இருக்கும் மக்கள் அதற்கு ஒரு திருவிழா நடத்துவார்கள்..., வழக்கமாக அங்கே ஆட்டோ நிறுத்துபவர்கள், பக்கத்து, எதிர்க் கடைக்காரகள் மற்றும் தள்ளு வண்டிக்காரர்களிடம் இருந்து காசு வசூலித்து... மிகப்பெரிய ஸ்பீக்கர் வைத்து விழாக் கொண்டாட்டத்திற்காக ஏதேனும் சினிமாப்பாடல் அலறிக் கொண்டிருக்கும்.....
சென்னையின் அடர்த்தியைப் பற்றி கவலைப்படாமல் இது போன்ற பிளாட்பார வாழ்க்கைகளும் அவர்களின் சுமைகளும், கஷ்டங்களும் என்று அதற்குள் இருக்கும் வலிகளும் வாழ்க்கையும் மிகவும் சுவாரஸ்யமானவை..., ஆழமாய் அவர்களின் வாழ்க்கையை உள்வாங்கி இருக்கிறேன். என்னதான் கஷ்டம் என்றாலும் இரவு ஆக, ஆக எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்டு, சிரித்து, பேசி உறங்கும் இவர்களின் சந்தோசமே உறக்கம்தானோ என்று கூட பல முறை எண்ணி இருக்கிறேன்...
நான் என்னும் ஒரு கட்டுக்குள் நின்று எப்போதும் என்னால் வாழ முடியவில்லை என்பது எனது பலமா? இல்லை பலவீனமா என்று கூட எனக்குத் தெரியாது. நான் இவ்விதம் அது மட்டும் தெரியும். இவ்விதமாய் வாழ்வது இந்த உலக வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லை என்பது மாலதியால் நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். அதிகாலை என் உறக்கம் தெளிந்து நான் வெட்ட வெளி வானத்தை பார்த்து சிரித்துக் கொண்டும் , ரசித்துக் கொண்டும் இருப்பதைப் பார்த்து விட்டு தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்திருக்கிறாள்.
ஒரு ஷிப்பிங் கம்பெனியில் அக்கவுண்ட்டென்ட் ஆக அவள் வேலை பார்க்கிறாள். வாழ்க்கையில் மாலதிக்கு எல்லாமே கணக்குதான், எல்லா விடயங்களையும் அவள் அணுகும் போக்குகள் இரண்டே விடயதுக்குள் அடங்கி விடும், ஒன்று வரவு, இன்னொன்று செலவு. இது போக ஆர்மி ரூல்ஸ் போல இந்த இந்த நேரத்துக்குள் இதை இதை செய்து விட வேண்டும் என்று கண்டிப்பு வேறு....! அழகான, அன்பான மனைவிதான் ஆனால் அவள் உலகத்தில் அவள், நான் மற்றும் என் பிள்ளைதான் பெரும்பாலும் இருப்பார்கள். இது ஒருவகையில் சரிதான் ஆனால் எனக்கு ஒரு வகையில் தவறும் கூட.
என்னால் ரெடிமேடாக வாழ முடியாது. ஒரே மாதிரி சிகையையோ, முகத்தையோ கூட நான் வைத்துக் கொள்வது கிடையாது, ஒரு நேரம் ஷேவ் செய்து மீசையை திருத்தி வைத்துக் கொள்வேன், ஒரு நேரம் குறுந்தாடி வைத்துக்கொள்வேன் ஒரு நேரம் மழுங்க சிரைத்து விட்டும் இருந்திருக்கிறேன், பெரும்பாலும் தாடியோடு கூடிய நறுக்கி செதுக்கப்படாத மீசையோடும் இருந்திருக்கிறேன். இப்படித்தான் உடுத்த வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுக்குள் நான் சிக்க விரும்புவதில்லை. காரணம்...புறத்தை ஒரு அடையாளமாக நாம் பிடித்து வைத்துக் கொண்டால், என் தோற்றம்தான் நான் என்று நம்பி உடலோடு சிறைப்பட்டுப் போய்விடுவேன் என்ற எண்ணம்தான்...
நான் என்று எண்ணும் இந்த உடலை ஒரு அடையாளத்துக்குள் வைத்து, நான்.. நான், என்று பார்த்து அதை உறுதி செய்து கொள்வதை விட...பலமாதிரியான வெளிப்பாடுகளில் நான் இப்படித்தான் என்ற ஒரு அடையாளம் வெகு வேகமாக மனதில் இருந்து அழிந்து போகத்தான் செய்யும்.இது என்னுடைய கணக்கு. இந்த கணக்கே என்னை பைத்தியக்காரன் என்று நிறைய பேரைச் சொல்லவைத்திருக்கிறது.
மாலதி கூட அடிக்கடி சொல்வாள் நீங்கள் வாழும் வாழ்க்கை பிராக்டிகலா எப்டிங்க ஒத்து வரும் என்று? பாக்கெட்டில் 1000 ரூபாய் வைத்துக் கொண்டு 500 ரூபாய் கடன் கேட்பவனிடம் இல்லை என்று எனக்குப் பொய் சொல்லத் தெரியாது. காசு கடன் கொடுத்தவன் திருப்பிக் கொடுக்கவில்லையெனில் என்னுடைய சூழ்நிலை எனக்கு அழுத்தம் கொடுக்காதவரை காசை திருப்பி வாங்குவதற்காக பொய் சொல்லி நிர்ப்பந்தம் செய்தது கிடையாது. பணத்திற்கு முன்னால் உறவை பெரிதாக நான் பார்த்து பார்த்து, பணத்திற்காக உறவை துச்சமென மதித்து, மிதித்தவர்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டு, ஒடுங்கி, ஒதுங்கி இருக்கிறேன்.
மிருதுவாய் வாழ்க்கை சொன்ன பாடங்களை எல்லாம் அனுபவங்களாக்கிக் கொண்டு தவறான புரிதல் இல்லாமல் மனிதர்கள் நகரவேண்டும் என்று கடுமையாய் தியானம் செய்திருக்கிறேன். பல நேரம் பளார் என்று வாழ்க்கை முகத்தில் அடிக்கவும் செய்திருக்கிறது. திருமணமான புதிதில் என்னை எதிர் கொள்ள முடியாமல் மாலதி அதிகம் என்னிடம் சண்டை செய்திருக்கிறாள். இப்போது எல்லாம் நான் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை. அவள் ஏதாவது சொன்னால் கூட நான் மெளனித்து நகர்ந்திருக்கிறேன், காரணம் சப்தங்களின் நியாயங்கள் எப்போதும் ஜெயித்து விடும். மெளனத்திற்கு நியாயம் என்றும் அநியாயமென்றும் ஒன்றும் கிடையாது.
பசிக்கு ஏதாவது தேவையெனில் அவளுக்குப் பிடித்ததையே எனக்குப் பிடித்ததாய் நான் மாற்றிக் கொண்டிருக்கிறேன். என் மகனை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டும் என்று அவள் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை இருந்தாலும் நான் எதிர்த்து எதுவும் சொன்னதில்லை. இதோ நான் எழுந்து ஒரு மணி நேரம் ஆகி விட்டது. மணி ஐந்தரை ஆகப் போகிறது. அடுப்படியில் சென்று ஒரு காபி போட்டுக் குடிக்க நான் முயலவில்லை. காரணம் காப்பித்தூள் அதிகமாய் எடுத்து விட்டேன், சீனியை கீழே சிந்தி விட்டேன் என்று அவள் சத்தமிடுவாள்....., சரி அவளே எனக்கு ஒரு காப்பி எடுத்துக் கலக்கிக் கொடுக்கலாம் என்று எழுப்பலாம்..ஆனால்...காலங்காத்தாலேயே உங்களுக்கு வேற வேலையே இல்லையா....என்று காலையை கர்ண கொடூரமாய் ஆக்குவாள்...
காலைப் பொழுது மிக அருமையானது,,,,! ஒரு நாளை தொடங்கும் போது இனிமையாய்த் தொடங்கலாமே என்று கூறி விட்டு டபுளாக பல முறை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.
பெரும்பாலும் கல்யாணம் ஆன புதிதில் பெண்களை ஆண்கள் ஆளுமை செய்வது போலத் தோன்றினாலும் ஒரு ஐந்து வருடங்களைக் கடக்க ஆரம்பிக்கும் போது பெண்களே பொதுவாக ஆளுமை செய்கிறார்கள். பல்வேறு சூழல், மற்றும் நிர்ப்பந்தங்கள், மற்றும் வெளி வேலைகளினால் ஏற்படும் மன அழுத்தங்களால் ஆண்கள் வீட்டிலும் ஒரு போராட்டத்தை மேற்கொள்ள விரும்புவதில்லை......கோபங்களை மெளனமாகக் கொண்டு நகர்ந்து விடுகிறார்கள்....
நான் ஒரு மனிதன், அதன் பிறகு ஒரு படைப்பாளி....அதன் பிறகு ஒரு கணவன், அதன் பிறகு ஒரு அலுவலகத்தில் பணி புரிபவன், என்று கூறியதற்கு மாலதி சொன்னாள்..உங்கள் கவிதையையும், கட்டுரையையும் கதையையும் வைத்துக் கொண்டு இரண்டு பவுன் தங்கச் சங்கிலி வாங்கிட்டு வாங்க அன்னிக்கு ஒத்துக்குறேன்...நீங்க ஒரு படைப்பாளி உங்க படைப்புக்கு விலை இருக்குன்னு நான் ஒத்துக்கிறேன் என்று..
நான் உணர்வுகளால் வாழ்பவன், அவள் உணர்ச்சிகளால் வாழ்ப்பவள். ஆண் என்பவன் பெண்ணை அடக்கி விடுவான் என்று காலம் காலமா சொல்லப்பட்டு இப்போது அதற்காகவே பெண்கள் இரண்டு மடங்கு ஆண்களை அடக்க முஸ்தி காட்டுகிறார்கள். இந்த ஆர்வம் ஆண்களின் உரிமைகளையே பறிக்குமளவிற்குத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு நாள் வீட்டில் தொலை பேசி அடித்துக் கொண்டிருக்கையில் ஒரு நாள் மாலதி அடுப்படியில் இருந்தாள்...நான் ஹாலில் அமர்ந்துகொண்டு ஒரு காற்றினூடே பறக்கும் காகிதத்தைப் பற்றி கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்....
கற்பனா உலகில் சஞ்சரித்து அதன் இருப்பு நிலையிலிருந்து கவிதையை பிழிந்து கொண்டிருந்த என் மூளைக்குள் அந்த தொலை பேசி அழைப்புக் கேட்கவில்லை.....மாலதி வேகமாய் வந்து என் கவிதைப் பேப்பரை கிழித்துப் போட்டு விட்டு......ஒரு போன் அடிக்கையில் எடுக்க கூட முடியல அப்படி என்ன கவிதை வேண்டிக் கிடக்கு என்று சத்தம் போட்டு விட்டு போய் விட்டாள்...எனது கோபம் அதிகமாகையிலேயே உள்ளுக்குள் ஒரு சப்தம் அடங்கிப் போ, சண்டைப் போட்டு என்ன ஆகப் போகிறது என்றது.
நானும் அவளை நேசிக்கிறேன்...அவளும் என்னை நேசிக்கிறாள் இதில் சந்தேகம் இல்லை. எனது நேசிப்பு அவளின் உடல் கடந்த நேசிப்பு அவளின் நேசிப்பு உடலுக்குள் இருந்து உடலை நேசிப்பது....! இதோ பளீச்சென்று விடிந்து விட்டது.....மாலதி எழுந்து விட்டாள்...
என்ன ஐயா காலையிலேயே ட்ரீம் அடிக்க ஆரம்பிச்சாச்சா.... இந்தாங்க காபி என்று நங்கென்று டேபிளின் மீது வைத்து விட்டு டைம் ஆச்சு, நான் குளிக்கப் போறேன்....ஏங்க காலையிலேயே எழுந்திட்டீங்கள்ள அந்த வென்னீர் ஹீட்டரை ஆன் பண்ணினா கொறஞ்சா போயிடுவீங்க....மண்ணு மாதிரி எல்லாத்தையும் கேளுங்க ஆனா ஒண்ணும் செய்யாதீங்க என்று சொல்லி விட்டு பாத்ரூமிற்குள் சென்று கதவடைத்தாள்..
இன்று நான் அலுவலகத்திற்கு மதியம்தான் செல்ல வேண்டும். காலையில் ஒரு மீட்டிங் இருக்கிறது. எல்லா கவிஞர்களையும், படைப்பாளிகளையும் வரச் சொல்லி இருக்கிறார்கள். வெளிச்சம் பதிப்பகம் இந்த கூட்டத்தை நடத்தி சில தலைப்புகளைக் கொடுத்து பேசச்சொல்லி அவற்றை எல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிடப் போகிறதாம். ஆடியோ சிடியாக வெளியிடப்போவதாகவும் கூறினார்கள். வெளிச்சத்தின் உரிமையாளர் சிவகுமார் எனது நண்பர். எனது கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு என்னைக் கட்டிப் பிடித்து ஆதரவு கொடுத்து வாழ்த்தி ஊக்கம் கொடுத்தவர். இன்னமும் கொடுப்பவர்.
காப்பியைக் குடித்தபடி ....தினசரியை மேய்ந்து கொண்டிருந்தேன். மாலதி குளித்து விட்டு வந்து பரபரத்தாள்....ஏங்க வெட்டித்தனமா உக்காராம குளிச்சுட்டு கிளம்புங்க..கண்ட கண்ட இலக்கியம் கூட்டம்னு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க..சீறினாள்..
பிரிட்ஜ்ல மாவு இருக்கு தோசை சுட்டு சாப்பிட்டுக்கோங்க....இந்தக் குப்பையை கொண்டுபோய் கொட்டிட்டுப் போங்க...., எனக்கு நேரமாயிடுச்சு, நேத்து வாங்கின பிஸ்ஸா இருக்கு நான் சூடு பண்ணி சாப்டுக்கிறேன்....என்ன சரியா? கேட்டுக் கொன்டே தலையை அள்ளிக் கட்டி பேண்ட் போட்டுக் கொண்டாள்...லிப்ஸ்டிக், மேக்கப் சகிதம்...அவள் கிளம்பிக் கொண்டிருகையில்...
அதிகாலை மழையில்
நான் நனையும் தருணங்கள்,
ஒரு நள்ளிரவு விண்மீனோடு
ரகசியம் பேசும் நொடிகள்...,
கனவுகளை மீட்டெடுத்து வந்து
மீண்டும் அசைபோடும் நிமிடங்கள்,
வானம் பார்க்கும் பொழுதுகளில்
உடல் மறந்து கிடக்கும் நேரங்கள்...,
என்று ....
சொர்க்கங்களில்தானே
நான் எப்போதும் வாழ்கிறேன்...?!!!!
நான் கிறுக்கிக் கொண்டிருந்த வெள்ளைப் பேப்பர் காற்றில் படபடக்கையில்..மாலதி கத்தினாள்....மச மசன்னு உக்காராம கிளம்புங்க....சரியான சோம்பேரி நீங்க....! இப்டியே கிறுக்கி கிறுக்கி என்னத்த நாம சாதிச்சுட்டோம்....காதில் நெருப்பை ஊற்றினாள்..
நான் கிளம்புறேங்க...பாய் என்று வாசல் கதவை தடாரென்று அடைத்து விட்டு போயே விட்டாள். எழுத்தும், ஆக்கமும் படைப்பும் சாதனை என்றுதான் இந்த உலகம் பார்க்கிறது....ஆனால் அது ஆத்ம திருப்தி என்று எத்தனை பேருக்குத் தெரியும்....?
வீடு நிசப்தமாய் இருந்தது. மேலே நிமிர்ந்து பார்த்தேன்....மின் விசிறி மெளனமாய் சுற்றி அறையெங்கும் காற்றை பரவ விட்டுக் கொண்டிருந்தது. கவிதைத் தாள் டேபிளில் படபடத்துக் கொண்டிருந்தது. மணி பார்த்தேன் எட்டை தொட இன்னும் கால் மணி நேரத்தைக் காட்டியது....குளிக்கலாம் என்று எழுந்தேன்...! காபி டம்ளரைக் கூட கழுவி வைக்க முடியாதாங்க உங்களால ....உள்ளுக்குள் உரக்க மாலதி கத்திக் கொண்டிருந்தாள். காபி டம்ளரை கழுவி வைத்தேன்.
தோசை சுட்டு சாப்பிட பிடிக்க வில்லை. குளித்து விட்டு எனது பையை எடுத்து தோளில் மாட்டினேன்...கதவைப் பூட்டி விட்டு மீண்டும் திறந்து வீட்டுக்குள் பார்த்தேன்...ஹாலில் ட்யூப் லைட் மற்றும் பேனை நான் அமர்த்த மறந்திருந்தேன். அமர்த்தி விட்டு...வீட்டைப் பூட்டினேன். மூன்று முறை இழுத்துப் பார்த்தேன்....பாத்ரூமில்....டேப்பை ஆஃப் செய்தேனா...? இல்லையா? சந்தேகம் புத்தியில் முளைத்து மீண்டும் போய் சரிபார்க்கச் சொன்னது...அட ஆஃப் செய்திருப்பேன் என்று ஆறுதல் படுத்திக் கொண்டு....பைக்கை எடுத்தேன்....கிக்கரை உதைத்து, ஆக்ஸிலேட்டரை முறுக்கி நகர்ந்தேன்.....
......
........
.......
அடுத்ததாக கவிஞர், நாவலாசிரியர் நீலகண்டன் பேசுவார்....அவருக்கு நாம் கொடுக்கப் போகும் தலைப்பு..பெண் விடுதலை....என்று பதிப்பக உரிமையாளர் கூறி வாஞ்சையோடு என்னைப் பார்த்து கண்களால் மேடைக்கு அழைத்தார்....
பலத்த கரகோஷத்துக்கு நடுவே மேடையேறினேன்....!!!!
கூட்டம் ஆவலாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. மாலதியைப் பற்றி ஒரு கணம் ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் பளீச் என்று ஒரு மின்னலைப் போல தோன்றியது....சுதாரித்துக் கொண்டு உரக்க பேச ஆரம்பித்தேன்.....
பெண் என்பவள் பெரும் சக்தி.....! பெண் விடுதலை என்பது........