துளையடைத்த புல்லாங்குழல்கள்......
நெடுந்தூரத் தேடலின்
புல்லாங்குழலிசை
பின்னணியாகிப் போகிறது
உன் ஞாபகங்கள்....
உயிரில்லாக் கடற்கரையின்
சூறைக் காற்று அமானுஷ்யம்
நிரப்பிக் கொள்கிறது
இதயம்.............
தழும்புகளுக்கும்
ஊனங்களுக்கும் இடையிலான
விரலிடைவெளியில்
ஊஞ்சலாடுகிறது கழிந்துபோன
நாட்கள்....
ரணங்களும் ரௌத்திரங்களுமாய்
நீ கிழித்தெறிந்த
இறந்தகாலம்... நிகழ்காலத்
தவிர்த்தல்களாய் கடந்துபோய்
எதிர்காலக் கைச்சொடுக்கல்
அழைத்தல்களாய் என் முன்னில்..
வெள்ளை வாள் வீசி
கழுத்தறுக்கக் கெஞ்சுகிறது
உயிர்... ! மறுத்து
கிழிசல் வழி அமிலமூற்றி
ரசிக்கிறது
வாழ்வியல் மாற்றங்கள்..........