கண்களை மூடியிருக்கும் நீதி.

ஒளித்து விளையாடும்
சிறு பராயம்தான்
நினைவுக்கு வருகிறது.....
பொய்சொல்லி ஒளித்து
போலீஸ்,கள்ளன் விளையாடியது
இப்போது நிஜமாகவே போயிற்றது
எந்த சான்றுகளுமற்று
எதையும் சமாளிக்க
பயிற்றப்பட்ட மனிதர்களோடு வாழ
பணித்து விட்டது காலம்
இங்கு எப்போதும்
நீதி பலருக்கு
நீதியாகவே கிடைக்கிறது
நடுநிலை நீக்கப்பட்ட தராசுகளில்
கண்கள் கட்டப்பட்டிருக்கும்
நீதி தேவதை தானே என்று
யாருமே கவனத்தில் எடுப்பதில்லை
தப்பிப்பதற்கான வழிகளை
ஒழுங்கு செய்து விட்டுத்தான்
தவறுகளை தயார் செய்கிறார்கள்
போதாததற்கு
ஒத்திவைக்கப்படுகின்ற
இடைவெளிகளிநூடே
தடயங்களை அளிப்பதற்கு
தேவையான அவகாசங்களை
வழங்கி விடுகிறது சட்டம்
திறந்த வெளியில்
திமிங்கிலங்கள் உலவ
சிறையில் தள்ளப்படுகின்றன
பாவப்பட்ட பட்டாம் பூச்சிகள்
இத்தனைக்கும் இடையில்
இந்த நிமிடம்
ஏதோ ஒரு மூலையில்
முகம் தெரியாத நிரபராதி
மிக மோசமாக
தண்டிக்கப்பட்டிருப்பா”ன்”(ள்)
நம்மிலிருந்தும் துண்டிக்கப்பட்டு!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.