கொஞ்சம் உங்கள் சிந்தனைக்கு-1
*********************************************************************
இந்த தலைப்பில் எழுதியுள்ள விஷயங்கள் என்னுடைய தனிபட்ட கருத்தும், எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் மூலமாகவும் நேர்ந்தவை. யாரையும் சுட்டி கட்ட அல்ல. யாருக்கேனும் மனகசப்பு இருந்தால் மன்னிக்கவும்.
**********************************************************************
விருப்பு வெறுப்பு எல்லோருக்கும் சொந்தமானவை. நம்முடைய ஆசைகளை மற்றவர் மீது திணிப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது. பெற்றோர்களின் வளர்ப்பு எது நல்லது, எது கெட்டது என்று மட்டும் சொல்லி கொடுத்தால் போதுமானது. அவர்களின் ஆசையை பிள்ளைகளின் மீது திணிப்பது ஏற்றுக்கொள்ளப்படாது.ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவர். நம் சூழ்நிலைகளுக்கேற்ப நம்முடைய குணங்களும் எண்ணங்களும் மாறுபடும். நாம் நினைத்ததுதான் சரியென்று மற்றவர் மீது திணிப்பது பெரிய குற்றம் ஆகும்.
பெரும்பாலும் நம் வீட்டில் எப்போது இந்த மாதிரி பிரச்சனை வருமென்றால் மகளோ மகனோ கல்யாண வயதை நெருங்கும்போது,
கல்லூரியில் சேரும்போது, வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும்போது மற்றும் பல நேரங்களில்.
பெற்றோர்கள் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைத்துகொள்கிறார்கள். அவர்களின் கருத்திலிருந்து சிறிது மாறுபட்டாலும் பெரியதாக கூப்பாடு போட ஆரம்பித்துவிடுகின்றனர்.
சின்ன வயதில் எப்படி எல்லாம் அழகு படுத்திப்பார்த்தோம் இப்போது ஏன் நம்மளை மதிக்க மாட்டேன் என்கின்றனர் என்று புலம்பி அழ ஆரம்பித்துவிடுகின்றனர். இதில் அவர்கள் பிள்ளைகளின் மேல் உள்ள அக்கரையில் செய்தாலும், ஒன்றை முற்றிலும் மறந்து விடுகின்றனர். அது தங்களுடைய பிள்ளைகள் தனிப்பட்ட மனிதர்கள் என்றும் அவர்களுக்கென்று தனிப்பட்ட கருத்துரிமை உண்டு என்றும் மறந்து விடுகின்றனர்.
எப்போதும் அவர்களை தங்களின் பேச்சை கேட்டு தங்களின் விசுவாசிகளாக இருக்க நினைக்கின்றனர்.
பிள்ளைகள் அவர்களுக்கு ஏற்பட்ட பழக்க வழக்கங்களினால் சில முற்போக்கு கருத்துகளையும் பரவிய எண்ணங்களையும் சொல்ல முற்படும் போது, கொஞ்சம் அதிகமாக அல்லது வீட்டாரின் போக்கிலிருந்து சிறுது மாறுபட்டாலும், அவர்கள்
சரியில்லை என்று பேச ஆரம்பித்துவிடுகின்றனர்.
கருத்து வேறுபாடு பல வீட்டிலும் பிள்ளைகள் காதல் கல்யாணம் செய்து கொள்ள முற்படும் போது மிக பெரிய விசயமாக பேசப்படும். பெற்றோர்கள் எப்போதும் தங்கள் பிள்ளைகள் தங்கள் பேச்சை தட்டாமல் தான் சொல்லும் பெண்ணையோ , ஆணையோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றனர். முன்னை விட இப்போது நம்மக்களிடையே ஜாதகம் பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. ஒரு சிலர் வீட்டில் பிள்ளைகளிடையே சண்டை போடாமல் இது நமக்கு ஆகாது, மற்றவர்க்கு வேண்டுமானாலும் ஒத்து வரலாம், நமக்கு தேவையில்லை என்று ஒதுக்க நினைக்கின்றனர். புதிய மாற்றத்தை ஏற்று கொள்ள நிறைய யோசிக்கின்றனர். இல்லை பயமுறுத்தி அடி பணிய செய்து விடுகின்றனர். இந்த மாதிரி சமயங்களில் தனி மனித சுதந்திரம் சிதைந்து போய் விடுகிறது. இதற்கு யார் மேல் பழி போடுவது?
நம்முடைய சமூகம் மற்றவர் என்ன சொல்லி விடுவார்களோ என்று கவனமாக இருந்து இருந்து தன்னுடைய இன்பத்தை சிதைத்து கொண்டிருக்கிறது.
இன்னும் வேறொரு பகுதியில் உங்களை சந்திக்கின்றேன்....................