மரங்கள் பேசுகிறது ......
உன்முன்னோர் ஊன்றிய விதையால்
ஊற்றிய நீராலும் உண்ட எருவாலும்
உயர்ந்திட்டோம் இந்தளவு இன்று !
உப்பிட்டவரை உள்ளளவு நினை, என
உள்ளத்தில் நிறைந்தக் காரணத்தால்
உயிராய் நினைக்கிறோம் வளர்த்தவரை !
உயர்ந்து வளர்ந்து தழைத்திட்டோம்
களைப்புடன் ஒதுங்கிடும் மக்களுக்கு
நிழல்தந்து உதவுகிறோம் நிறைவுடனே !
விளையும் நிலங்களுக்கு விண்வழியே
பொழிந்திடும் மழைத்துளி பெருகிடவே
வெளியிடும் மூச்சால் உதவுகிறோம் !
வாழ்ந்திடும் உயிர்களுக்கு பல்வகையில்
வீழ்ந்தாலும் எரித்திடும் விறகுகளாய்
அழிந்திட்டு பயனாகிறோம் அவனிக்கு !
இருப்பினும் மறந்திட்ட சிலபேரோ
வெற்றிடம் தேவையென வெட்டிடுவர்
மாற்றி வைக்கவும் மறக்கின்றனர் !
சாய்த்திடும் முன்னே யோசியுங்கள்
பலன் தரும் என்னை நோக்கிடுங்கள்
மாற்று வழி ஒன்றினை கண்டிடுங்கள் !
வேண்டுகிறோம் மதியுள்ள மக்களை
உதவிடும் எங்களை வீழ்த்திடுமுன்
உயிர் தந்த முன்னோரை நினையுங்கள் !
பழனி குமார்

