பாலையும் சோலையாகுமா ...

வானம் பொய்த்ததால் பூமி காய்ந்தது
வயலும் வாய்க்காலும் வறண்டுப் போனது

வாங்கிய கடனோ கனவிலும் வருது
தாங்கிடா வயிறோ பசியால் வாடுது

மனிதனே வழியறியா நொந்து நோகின்றான்
பிராணிக்கு திராணி இருக்குமா சொல்ல

காய்ந்த மண்ணை கண்டு முகர்கிறது
தீய்ந்த செடிகளை புசிக்கத் தேடுது

அருகில் நிற்கும் பறவையோ பார்க்குது
கருகியப் பயிரை வாட்டமுடன் நோக்குது

வறட்சியின் மிரட்சி மண்ணில் இதுதானா
புரட்சியால் பூமி புன்னகைப் பூத்திடுமா

வறண்ட நெஞ்சுக்கு தண்ணீர் வேண்டும்
வாழ்ந்திட உயிர்களுக்கு மழை வேண்டும்

இயற்கையும் இனி சிந்திக்க வேண்டும்
ஒருமுறையேனும் கண்ணீர் சிந்திட வேண்டும்

சரிந்திடும் சடலங்கள் நின்றிட வேண்டும்
எரிந்திடும் பூமியை அணைக்க வேண்டும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Feb-13, 11:54 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 97

மேலே