மிதியாதே! தமிழ் மடியை!

" இந்த நிமிடத்தில் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிடம் தமிழ் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நான் அறிவேன். ஆனால் போன நிமிடம் போய்த் தொலைந்தது. இந்த நிமிடம் சத்தியம் இல்லை. நாளை வரப்போவது சத்தியம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பேரை மாற்றி அழையுங்கள்."

இந்த வாக்கியங்களைப் பாரதியார் 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி 'சுதேசிமித்தரன்' பத்தரிகையில் வெளியிட்டார்.தமிழ்மொழி ஆட்சி மொழியாகிவிட்டது. பாரதி கண்ட கனவு ஓரளவு நனைவாகி விட்டது.ஆயினும் நம் தமிழ்நாட்டு மக்கள் சிலர் நமது அடையாளத்தை மறைத்து வேற்றுடை போத்துகின்றனர்.

"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்."

என்று பாடிய போது, நம் தமிழ்மொழியின் அழகு, ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள உணர்வுகள் எந்த மொழியிலும் கிடைக்காது என்றார்.

"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்."

என்று பாடிய போது, உலகமெல்லாம் பரவியிருக்கும் நம் தமிழ்மொழியையும்,அதனை பரப்பிய தமிழர்களையும் நினைத்து பெருமிதம் கொள்கிறார் பாரதி. ஆனால் நம் தமிழ்நாடு, தமிழ்மொழியை மறக்க முயல்கிறதா? இல்லை தமிழை பாதுகாக்கவும் அடுத்த தலைமுறைக்கு அதன் அழகை எடுத்துச் சொல்லவும் தவறி விட்டதா?

தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் ஆங்கிலப் பள்ளிகளில் ஆரம்பித்து, இன்று தமிழில் பேசுபவர்களை பார்த்தாலே கொலைக் குற்றம் செய்தவன் போல் பார்கின்றனர் ஆங்கிலத்தை கௌரவிக்கும் பல்வேறு நிறுவனங்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் தனது கையிலும்,கைபையிலும் ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக் கொள்வதன் மோகம் அதிகரித்துவிட்டது.
நம் தமிழ்நாட்டை பற்றியும்,தமிழ்மொழியை பற்றியும் உண்மைச் சம்பவங்கள் எத்தனையோ புத்தகங்களில் புதைந்தியிருக்கிறது.அதனைத் தோண்டி எடுக்காமல்,அயல்நாட்டின் பெருமைகளை நினைத்து பூரிப்பது எவ்விதத்தில் நேர்த்தியானது? நம் வீட்டின் கிணற்றில் அள்ளி பருக அமுதம் போல் குடிதண்ணீர் இருக்க, அடுத்த வீட்டு தண்ணீரில் வாய் நனைக்க வாயிலில் காத்திருப்பானேன்? சொந்த வீட்டை விற்று வாடகை வீட்டில் அமர்வது பெருமையை சம்பாதிக்காது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழ் மாணவனுக்கு தெரிந்த திருக்குறள் ஆங்கல மோகத்தில் புரளும் தமிழர்களுக்கு தெரிவதில்லை.


வெளிநாட்டின் நல்ல சிந்தனைகளும்,கருத்துக்களும் அறிந்து கொள்வதில் தவறில்லை. நம் மொழியின் வலிமை ,தமிழர்களின் வரலாறு ,தமிழின் அழகு, நல்லொழுக்கம் கற்பிக்கும் சிறந்த நூல்கள் என எண்ணற்ற சொத்துக்கள் நம்மிடமிருக்கிறது.
பிறமொழி வாயிலாக நமக்கு தெரியாத விஷயங்களை சேகரிப்போம். அதனை நம் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழில் உருவாக்குவோம்.


"வீட்டிற்கோர் மரம் வளர்ப்போம்" -- இது உலகை பாதுகாக்க வலியுறுத்தும் கூற்று.

"வீட்டிற்கோர் தமில்நூலகம் அமைப்போம்" ---இது நம் தமிழ்மொழியை பாதுகாக்க வலியுறுத்தும் கூற்று.

பெற்றோர்களே திருந்துங்கள்! நமது குழந்தைகள் தமிழ் என்றால் என்ன? என்று கேட்கும் நிலைக்கு கொண்டு வராதீர்கள்!

எழுதியவர் : சுமி (3-Feb-13, 9:48 pm)
பார்வை : 273

மேலே