தளும்பிச் சிரிக்கும் நீர்.....
குழந்தை...
தன் ஓவியத்தில்
தண்ணீரை வரைகிறது நீல நிறத்தில்.
தனக்கு ஒரு வண்ணம்
கிடைத்த மகிழ்ச்சியில்....
நீர் தளும்பிச் சிரிக்கிறது
அந்தக் காகிதமெங்கும்.
*******************************************************************
மது நிரம்பிய பூக்கள்
மௌனமாய் இருக்கின்றன.
பூவில் அமர்ந்து
உதடு பதித்த இந்த வண்ணத்துப் பூச்சி ஏன்...
தலை சுற்றித் திரிகிறது....
எல்லாத் திசைகளிலும்.
*********************************************************************
வார்த்தைகளற்ற
ஒரு கவிதையை எழுதத்தான்
காத்திருக்கிறேன் இந்தக் கணம் வரை.
உன் மௌனத்திலிருக்கும்...
நிறைந்த ஓசை....
வார்த்தைகளால் நிரப்பிவிடுகிறது
என் வரியற்ற கவிதையை.
*********************************************************************
ஈரத்தோடு...
காதலையும் கொண்டுவந்து விடுகிறது
மழை.
கணப்பாகும் உடம்புக்குள்
கிடந்தலைகிறது இறந்தகாலம்...
நிகழ்கால நிஜங்களைப் புறந்தள்ளியபடி.
எனது புன்னகை...
மழையின் தாளமாகிவிட...
என் எல்லா மழையிலும்....
பிறந்து சிரிக்கிறது....
என் இறந்த காலத்துக் காதல் காளான்.
**********************************************************************