வண்ணங்களை தொலைத்த வானவில்

* பேருந்து நிறுத்தத்தில்...
வெள்ளைத் தோலின் மினுமினுப்பில்
கண்கள் தொலைக்கும் காளையரே...!
கறுப்புத் தோல் கொண்ட
இந்த கன்னிகளின் உணர்வுகள் புரியவில்லையா..?

* நிறம் மட்டுமே நிஜம் என்ற
உங்கள் நிழல் உலகத்தில்
அந்த வெள்ளை தேவதைகளுக்கு
வேலைக்காரிகளா நாங்கள்..?

* சப்பை என்று எங்களை சாடும் பொழுது
உடன் பிறந்த உங்கள் சகோதரிகளின்
நினைவுகள் வரவில்லையா...?

* திராவகம் அருந்தியதைப் போன்ற
ஒரு வேதனை உங்களின் கேலிப் பேச்சுக்கள்
எங்களைக் கீறிப்பார்க்கும் பொழுது...

* அழுக்குப் படிந்து கிடக்கின்றன..
முகத்தைக் கண்டு ஆர்ப்பரிக்கும்
உங்களின் அகத்தில்.....
அப்புறப்படுத்துங்கள் அதை...

* நாங்கள் வண்ணங்களை தொலைத்த வானவில்...
வசைப்பாடி வதைக்காதீர்கள் எங்கள் வாழ்வினை...

* தரம் குறைந்த உங்களின் கிண்டல்களால்
தாழ்வு மனப்பான்மை எனும் நச்சு மரம்
முளைக்கிறது எங்கள் மனதில்..
வெந்து வெதும்புகிறோம் நாங்கள்...
அதை வெட்டி எறிவதற்குள்...

* ஆராதிக்க சொல்லவில்லை எங்கள் அழகை...
அதை அசிங்கப்படுத்தி ஆனந்தம் காண முயலாதீர்கள்
என்பதே எங்களின் உறுதியான இறுதி வேண்டுகோள்...!!

எழுதியவர் : ரமணி (11-Feb-13, 9:50 pm)
பார்வை : 178

மேலே