எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
அன்று பொழுது விடிந்ததிலிருந்தே மனம் கனமாக இருந்தது. மிகப் பெரிய தவற்றைத் தெரிந்தே செய்து விட்டதைப் போல் மனம் ஓலமிட்டது. எனக்கு நானே எத்தனையோ முறை ஆறுதல் கூறியும் மனம் அமைதியடையவில்லை.
இதுநாள் வரை, அவன் அனுப்பிய அந்தக் குறுந்தகவலுக்கு அவனது நன்றி கெட்டதனமே காரணம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டிருந்தேன். ஆனால்... ஆனால்.. நேற்று நான் படித்த அந்தக் கவிதை வரிகள், காயம் பட்ட என் இதயத்தை மேலும் கீறி, இரத்தம் கசியச் செய்து விட்டன. அவன்!... அவன் எடுத்த முடிவுக்கு விதை போட்டவன் நான்தானே! எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
சோறுபோடும் மொழிகளெல்லாம்
சொந்தமொழி ஆகுமா? உனக்குச்
சோறுமட்டும் போதுமா? நிலை
மாறும்போது தாயைக்கூட
மாற்றிக்கொள்ளத் தோன்றுமா? தன்
மானம்உனக்கு வேண்டாமா?
அந்த வைர வரிகள் என் இதயத்தைக் கிழித்துக் கொண்டிருந்தன.
“என்ன மிஸ்டர் செங்கதிர், மாணவர்கள் எல்லாம் போயிட்டாங்க! நீங்க மட்டும் ஏதோ யோசனையில் இருப்பது போல் தெரிகிறது, என்ன? ஏதும் பிரச்சனையா? உங்க முகமே சரியில்ல.” வளவனின் குரல் கேட்டு மீண்டும் நினைவுக்கு வந்தேன்.
“ஒன்னுமில்ல மிஸ்டர் வளவன்! நம்ம பள்ளி சீன மாணவர்களுக்கு வரலாறு பாடம் போதிப்பது ரொம்ப சிரமமா இருக்கு. மலாயும் புரியல. ஆங்கிலமும் புரியலே. எதைக் கேட்டாலும் தெரியல என்கிற பதில்தான்!” “மலாய், ஆங்கிலம் தெரியலனா என்ன? சீனர்களுக்குத் தங்கள் தாய்மொழி சீனம் தெரியும். தாய்மொழியை நேசிக்கிற இனம் குட்டிசுவரா போனதா வரலாறு இல்லங்கிறது உங்களுக்குத் தெரியாதா என்ன?”
வளவனும் நானும் ஒத்த வயதுடையவர்கள். பல வருடங்களாக ஒரே பள்ளியில் பணியாற்றுகிறோம்.
தமிழ்மொழியின் மீதும் தமிழினத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டவர் வளவன் என்பது அனைவரும் அறிந்தது. தன்னைத் தன் பெற்றோர் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லை என்ற ஏக்கப் பெருமூச்சு அவரிடம் வெளிபடாத நாள்களே இல்லை எனலாம். அவரின் மூன்று பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளியில் பயின்று பட்டம் பெற்றவர்கள் என்று பெருமையாகக் கூறுவார்.
“மிஸ்டர் கதிர்... மிஸ்டர் கதிர்... என்ன மறுபடியும் கனவா?” வளவன் என் தோளைக் குலுக்கினார். என்னையும் அறியாமல் என் கண்களில் வழிந்த நீர்த்துளிகளைக் கண்ட வளவன் அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்பதை அவர் முகமாற்றமே காட்டியது. “என்ன மிஸ்டர் கதிர் அழுகிறீர்களா? ஏன்? என்ன நடந்தது? நான் ஏதும் தவறா சொல்லிவிட்டேனா?” பதை பதைத்துக் கேட்டார் வளவன்.
“ஐய்யய்யோ! நீங்க ஒன்னும் சொல்லல மிஸ்டர் வளவன். எல்லாம் நான் செஞ்ச தவறு. இப்ப அனுபவிக்கிறேன்.” என்றேன் இலேசாக விம்மியவாறு. “அப்படி என்ன தவறு செஞ்சிட்டீங்க?” எதையுமே யூகிக்க முடியாதவராய்க் குழப்பத்தோடு வளவன் இருப்பதை அவரின் நெற்றியில் விழுந்த கோடுகள் பறைசாற்றின. “என்னோட ஒரே மகன், முகிலன்...” விம்மினேன். “அடக் கடவுளே! அவனுக்கு என்ன ஆனது?”
அவனுக்கு ஒன்னுமில்ல! தமிழ் படிச்சா, எங்க, எதிர்காலம் இல்லாம போயிடுமோன்னு பயந்து, தேசிய பள்ளிக்குப் படிக்க அனுப்பினேன். ஆங்கிலத்திலும் மலாயிலும் முகிலன் சரளமாகப் பேசும் அழகை இரசிக்காத நாளே இல்ல எனலாம். நானும் என் மனைவியும் முகிலனிடம் மறந்தும்கூட தமிழில் பேசியதில்லை! ஆங்கிலப் பேச்சுப்போட்டிகளில் முகிலன் பரிசுகளை வாங்கிக் குவித்த போதெல்லாம் பூரித்துப் போனேன்.
அவன் பட்டம் வாங்கிய போதுகூட, நல்ல வேளையா நண்பர்கள் பேச்சைக் கேட்டுத் தமிழ் படிக்க அனுப்பல என்று எனக்கு நானே பெருமிதப்பட்டுக் கொண்டேன். ஆனா.. ஆனா... இன்னைக்கு அவன்..”
“ஐயோ!.. அவனுக்கு என்னதான் ஆச்சு?” வளவன் அலறினார். “மாஸ்டர் பட்டப் படிப்புக்கு ஆஸ்திரேலியா சென்றவன் அங்கேயே ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும் தான் வாழ்வில் முன்னேற வேண்டுமாயின் அப்பெண்ணையும் அவள் குடும்பத்தாரையும் விட்டு வர முடியாது எனவும்..” மேலும் பேச விடாமல் என் நா தழு தழுத்தது. வளவன் ஏதும் கூறாமல் அமைதியாக என் முகத்தைப் பார்த்தபடியே இருந்தார்.
“பெற்று வளர்த்த எங்க கிட்ட கூட நேரில் வந்து சொல்லல..” “பின்ன கடிதம் போட்டானாக்கும்!” எரிச்சலுடன் கேட்டார் வளவன். “அதுவும் இல்ல! எஸ்.எம்.எஸ். அனுப்பியதோட சரி.” சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விசும்பினேன்.
“இம்ம்ம்...” வளவன் ஒரு பெருமூச்சு விட்டார். “உங்க மகன, தாய்மொழி பற்றுக் கொண்டவனா வளர்த்திருந்தீங்கனா கண்டிப்பா அவன் இப்படிச் செய்திருக்க மாட்டான்.
‘மாதா, பிதா, குரு, தெய்வம்’, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ போன்ற தாரக மந்திரங்களை இளவயதிலேயே, பசுமரத்தாணி போல பிள்ளைகளின் மனத்தில் பதிய வைக்கும் மிகப் பெரிய பணியை நம்ம தமிழ்ப்பள்ளிகள் செய்து வருகின்றன. இளவயதிலேயே விதைப்பதுதான் பிறகு மரமாகி பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளை உருவாக்குதுன்னு தெரியாமலே பலபேர் இருக்காங்க!
தாய்மொழிப் பற்று இல்லாம வளர்க்கப்படும் பிள்ளைகள், தாயையும் தாய்நாட்டையும் நேசிக்காமல் இருப்பதில் என்ன ஆச்சிரியம் இருக்க முடியும்? வயிறு வளர்க்க தாய்மொழியைத் தூக்கி எறிய அன்றைக்கு நீங்க சொல்லிக் கொடுத்தீங்க.. இன்றைக்கு என்ன ஆச்சு? தன்னோட வயிற்றை வளர்க்க தாய்தந்தையைத் தூக்கி எறிஞ்சிட்டான் உங்க மகன். இப்ப சொல்லுங்க மிஸ்டர் செங்கதிர், யார் மேல குற்றம்?”