உயிரோடு இருக்க உதவுங்கப்பா!

முன்பெல்லாம்
பண்டிகைகாலங்களில்
வெடி வெடிப்பார்கள்...
அசூரர்கள் அழிந்தார்கள் என்று.

திருவிழாக்களில்
வெடி வெடிப்பார்கள்
சாமி ஊர்வலம் போகும் போது...
வேடிக்கையாக இருக்கும்

அப்புறம்
செத்தவனின் கடைசிப் பயணத்தில்
அஃது எதற்கு என்று தெரியவில்லை...?

இப்போதெல்லாம்
அடுத்தவனைச் சாகடிக்க
வெடி வெடிக்கிறார்கள்...

காய்கறி வாங்க
கடைத்தெருவுக்குப் போனாலும்...
கத்தரிக்காயும்
வெடிகுண்டாகவே தெரிகிறது...
எப்போ வெடிக்குமோ?
இதயம் துடிக்கிறது

செத்தவனுக்கு
ஆறுதல் சொல்லிவிட்டு
அஞ்சோ பத்தோ
அவன் கையில் திணித்துவிட்டு
மீண்டும் வெடித்தாலும் வெடிக்கும்
உஷாராக எல்லோரும்
வீட்டுக்குள்ளே போங்க என்று

அட...போங்கப்பா..
புண்ணாக்கு தலையர்களா...

இன்னொரு துப்பாக்கி திரைப்படம் வரும்
அதைப் பார்த்து தெரிந்துகொள்கிறோம்
எப்படி வெடிக்காமல் தடுப்பதென்று..

இன்னொரு விஸ்வரூபம் வெளிவரும்
அதைப் பார்த்து தெரிந்துகொள்கிறோம்
எப்படி வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதென்று..

அதையும் நாங்கள் பார்க்க வேண்டும்
அதுவரை நாங்கள் வெடித்துச் சிதறாமல்.....
உயிரோடு இருக்க உதவுங்கப்பா!

.....................................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (22-Feb-13, 1:59 pm)
பார்வை : 98

மேலே