இக்கொடுமைகள் தொடரும்....

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் பின்னணி இதோ....

இக்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை கொடு என சமூகம் போராடுவது மிக வியப்பாக இருக்கிறது. ஏனெனில் இக்கொடுமைக்கு காரணமே இச்சமூகம் தான்.

ஒரு வீட்டில், ஒரே வயிற்றில் பிறந்த ஒரு ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் இச்சமூகம் சமமாக பார்ப்பது கிடையாது. ஒரு 18 வயது பெண்ணுக்கு துணையாக 8 வயது சிறுவனை அனுப்பும் போதே, நாம் அச்சிறுவனுக்கு இப்பெண்ணை விட தான் பெரியவன் என்கிற ஆணாதிக்க உணர்வை கற்றுக்கொடுத்து, வளர்க்கிறோம்.

சிறிய வயதில் 2 குழந்தைகளையும் சமமாக பார்க்கும் நாம் அவர்கள் 15 வயதை தாண்டும் போது பிரித்து பார்க்க ஆரம்பிக்கிறோம்.

"அவன் பையன். அவன் வெளில போலாம். நீ போக கூடாது" என சொல்லும் ஒவ்வொரு பெற்றோரும் இக்கொடுமைக்கு பொறுப்பு.

தன் பிள்ளைகளையே சமமாக பார்க்க தெரியாத இச்சமூகம் எப்படி மற்றவர் பிள்ளைகளை மதிக்கிற உணர்வை கற்றுத்தரும்?

இகாரணத்தினாலேயே ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின் அண்ணன் - தங்கை அல்லது அக்காள் - தம்பி உறவு கடுமையாக பாதிக்கப்படுகிறது. எந்த ஆண் பிள்ளையும் தன்னுடன் பிறந்த பெண் பிள்ளையை மதிப்பதில்லை. மாறாக, ஏளனம் பேசுகிறான். இதை பெற்றோரும் ரசிப்பது தன் பெரும் கொடுமை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்க்கப்படும் பிள்ளை, வன்கொடுமையில் ஈடுபடுவது மிக இயற்கை.

பெற்றோர்கள் இதற்கு சொல்லும் காரணம், பையன் தான் கடைசியா கொல்லி போடுவான். அதனால் தானோ என்னவோ முதுமை வயதில் இவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து வாழும் போதே கொல்லி வைக்கிறான்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. உண்மையில் இவ்வகுப்புகள் தேவையானது எம் பெற்றோர்களுக்குத் தான்.

குடும்பத்தில் இரு பாலின பிள்ளைகளையும் சமமாக பார்க்கிற நிலைமை வரும் வரையிலும் இக்கொடுமைகள் தொடரும்....

எழுதியவர் : (22-Feb-13, 5:02 pm)
பார்வை : 145

மேலே