நினைவுகளின் இசை...!

நேற்று இரவு நான் குடிக்க ஆரம்பித்தது. இதோ மறு பொழுது தொடங்கி விட்டது. நான் இன்னமும் குடித்துக் கொண்டிருக்கிறேன். குடிக்கவேண்டும் என்பதற்காய் நானாய் ஒதுக்கியோ அல்லது செதுக்கியோ எடுத்துக் கொண்ட வெள்ளை நாட்கள் இவை. மது அருந்தக் கூடாது. இது உலகம் போதித்து வைத்திருக்கும் பொது புத்தி. என்னை பொறுத்த வரையில் விழிப்புணர்வு என்பது இல்லாமல் உணவே உண்ணக் கூடாது. விழிப்புணர்வோடு எந்த செயலையும் செய்யலாம்.

நான், இதைச் செய்கிறேன், இதனை செய்வதால் இதுவெல்லாம் நிகழும். இதைச் செய்வதற்கு எனக்கு இவ்வளவு உடல் வலிவும், பண வலிவும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து செய்தால் என்னவாகும்..? என்றெல்லாம் யோசித்து தெரிந்தே ஒரு செயலைச் செய்யும் போது அங்கே ஒரு புரிதல் ஏற்பட்டு விடுகிறது. மது அருந்துதலை நான் உங்களுக்கு நியாயப்படுத்த இதை எழுத வில்லை. தயவு செய்து....மதுவுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்று கூறிக் கொண்டு இங்கே பேரணிகள் நடத்தி, பட்டிமன்றம் நடத்தி விடாதீர்கள்.

நான் குடிக்கிறேன். குடிப்பதை இந்தக் கணத்தில் விரும்பிச் செய்கிறேன். ஒவ்வொரு முறையும் உதடுகளைக் கடந்து தொண்டையை அறுத்துச் செல்லும் இந்த இராஜ திரவம் என்னை நானாய் பார்க்க வைத்திருக்கிறது. நான் குடிக்கையில் பெரும்பாலும் துணை சேர்வதில்லை. குடித்தால் எல்லோரும் அதிகம் பேசுவார்கள். நான் சாதாரணமாக நிறைய பேசுவேன், ஆனால் குடித்தால் பேசாமல் என்ன எனக்குள் நிகழ்கிறது என்று ஓய்வாய் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன்.

சோமபானங்களை தேவர்கள் புசிக்கலாம் என்று வழி விட்டு வழிபடும் என் சமூகம் மனிதர்கள் குடிப்பதை எப்போதும் கண்டிக்கத்தான் செய்கிறது. ஆமாம்.. குடிக்கிறேன் பேர்வழி என்று....வாழ்க்கை முழுதும் அதை மையமாய் வைத்து செயல்படுபவர்களைக் கண்டிக்கலாம். வித்தை என்பது மாதத்தில் இரண்டு மூன்று தடவை செய்து பார்ப்பது. அதை எப்போதும் செய்து கொண்டிருந்தால் அதற்கு பெயர் வித்தை அல்ல....! அப்படி எப்போதும் செய்யும் வித்தைக்கு மரியாதையும் இல்லை.

நான் வித்தையில் இருந்தேன். நானும் சில மதுக்குப்பிகளும், நிறைய மெளனமும், ஏதேதோ நினைவுகளும் மட்டும் என்னுடன் இருந்தன. போதை உச்சி வரை தலைக்கேறி எங்கோ என்னைத் தூக்கிச் செல்லும் உணர்வு கிடைக்கும் போது மது அருந்துவதை நிறுத்தி விட்டு அந்த உணர்வில் மிதந்து கொண்டே வெறுமனே கிடந்தேன்.....
....
.....
.....
....

அவளோடு பேசிச் சிரித்த வார்த்தைகள் எல்லாம் என்னைச் சுற்றி அதிர்வுகளாய் நடனமாடிக் கொண்டிருந்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவளுக்காய் இன்னமும் எனக்குள் மிச்சமிருக்கும் வார்த்தைகள் என்னுள் அதிர்ந்து கொண்டிருப்பதும்.

ஆமாம்... ஒரு நாள் அவள் சென்று விட்டாள். போகிறேன் என்று சொல்லி, நாங்கள் பரஸ்பரம் எதுவும் பேசிக் கொள்ளக் கூடவில்லை. நிறைய கவிதைகள் அவளுக்கு நான் சொல்லி இருக்கிறேன். அவளும் நிறைய கவிதைகளைச் சொல்லி முடிக்கும் போது எனக்கு கவிதையாகவே தெரிந்துமிருக்கிறாள். எனக்கு அவளைப் பிடிக்கும் என்று சொன்னால் அவளை நான் காதலிக்கிறேன் என்று அர்த்தமாகிவிடுமா என்று அவளிடம் கேட்ட போது, காதல் என்பது உலகாதாய வார்த்தை இதை விட்டு ஏன் நாம் தள்ளி இருக்கக் கூடாது என்று சொல்லி முடித்த பின் அவளின் உதடுகள் என் உதடுகளோடு இணைந்திருந்தன. முத்தம் காமத்தை அழைக்கும் காலிங் பெல் தானே ? என்று சொன்ன போது....முத்தத்தை முத்தமாக பாரென்றாள்.

உறவு கொள்ள ஏதேனும் ஒரு உறவு வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனத்திலிருந்து வெளியே வா என்றாள்...! எனக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தன அவளின் பதில்கள். காவியங்கள் எல்லாம் பொய் அவை உணர்வுகளை மிகைப்படுத்தி பார்க்கும் மனித மனங்களின் ஆசைகள் என்று நான் சொன்னதை அவளும் ஆமோதித்தாள். காதலைக் கொண்டாடும் உலகம்தான் காதலைப் பிடிக்கவில்லை என்கிறது. ஆணும், பெண்ணும் பழகுவதற்கு ஏன் இவ்வளவு கெடுபிடிகள்? நாங்கள் நண்பர்கள்தான்.... காதலர்கள் இல்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியதின் அவசியம் என்ன...? என்று நான் கேட்ட போது....

உறவுகள் என்பது உலகத்தின் பயம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு என்னை பார்த்து சிரித்தாள். நிறைய பேசினோம்.. இப்படி....நீட்சே கடவுள் இறந்து விட்டான் என்று சொன்ன போதே அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. இல்லாத கடவுளை இறந்து விட்டதாக ஏன் அவன் சொல்ல வேண்டும்? என்றும், சிக்மண்ட் பிராய்டு என்னும் மனிதரின் ஆராய்ச்சிகள் நமக்கு பயனாய் இருந்தாலும் அந்த மனிதன் இயல்பை ரசிக்க மறந்த ஒரு சபிக்கப்பட்ட மனிதன் என்றும்...., காமத்தையும் கடவுளையும் ஒன்று சேர்த்த இடத்தில்தான் ஓஷோ எனக்குப் பிடித்துப் போனார் என்றும்....

என்னையும் அவளையும் தவிர்த்து எல்லாமே பேசினோம்.

பின்னொரு நாளில்....
மொழியற்றவனின் கவிதையாய்
ஸ்பரிசங்களின் நீட்சியில்
காமத்தின் ஆழத்தில் நாங்கள் மூழ்கியும் கிடந்தோம்...
நீ எனக்கு யாரென்றாள்...
தெரியாது என்றேன்....!
நான் உனக்கு யாரென்றாள்....
அதுவும் தெரியாது என்றேன்...!
நான் எதை இழந்தேன் என்றாள்...
இப்போது பெற்றதை
இதுவரையில் இழந்தாய் என்றேன்...
கொஞ்சம், நஞ்சம் உள்ளுக்குள்
நிரம்பிக் கிடந்த வார்த்தைகளையும்
எங்கள் மெளனத்திலிருந்து பீறிட்டு வந்த
கண்ணீர் கழுவிக் கரைக்க...
ஒரு வெள்ளைக் காகிதமாய்
இருவரும் நிரம்பிக் கிடந்தோம்...!

பிரிவு என்று சொல்லாமல் பிரிந்த பின்னால் நினைவுகள் மட்டும் ஏன் பின்னோக்கி வரவேண்டும் என்ற கேள்வியோடு என் உச்சிப் பொழுதில் தொடர்ச்சியாய் மதுக் கோப்பையை கவிழ்த்து மீண்டும் சில மிடறு மதுவினை உள் இறக்கினேன்...

அலாதியான பொழுது இது. மீண்டும் வாழ்க்கையின் கடந்து வந்த அற்புத கணங்களை அசை போட எந்த ஒரு தடையுமில்லாமல் மது என்னும் மாமேதை என்னை என் நினைவுகளை, பாதுகாக்கிறான். காதுகளுக்குள் கிசு கிசுப்பாய் காதல் என்ற உலகாதாய வார்த்தை நமக்கு வேண்டாமே....என்றவள் புத்திக்குள்....உருவமின்றி படுத்துக் கிடந்தாள். இல்லாத உருவத்துக்கு உடை மட்டும் எதற்கு...?

விதிமுறைகளுக்குள் என்ன செய்தாலும் அதில் இயல்பு இருப்பதில்லை.... நிபந்தனைகளில்லா உறவுகள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அங்கே வாழ்க்கை சுமத்தியிருக்கும் யாதொரு நிபந்தனைகளும் இல்லை.

ஆமாம்.. அவள் இப்போது எங்கிருக்கிறாள் என்று எனக்குத் தெரியாது. ஒரு வேளை திருமணமாகி இருக்கலாம். மீண்டும் பார்க்கும் ஒரு தருணம் வந்தால் அவள் வேகமாய் ஓடி வந்து........ஹா....... ய் என்று கை குலுக்கலாம்.....; கணவன் அவளுடனிருந்தால்.. ஹி... இஸ்.. மிஸ்டர் என்று நாகரீகமாய் அறிமுகப்படுத்தலாம்; கண்டும் காணாமலும் ஓ....மை காட்.. இவனா...? என்று ஓடி ஒளியலாம்....; இல்லை பழைய நாட்களை நினைவு கூர்ந்த படி... மீண்டும் கை கோர்க்கலாம்....யாருக்குத் தெரியும்....? எல்லா சாத்தியக்கூறுகளும் நிறைந்ததுதானே....வாழ்க்கை.....?

எது எப்படியோ மறுபடியும் பார்க்கும் அந்தக் கணத்தில் முதலில் இருவர் மனதில் தோன்றப்போவது உறவு இல்லாமல் நாங்கள் வைத்துக் கொண்ட அந்த உடல் உறவுதான்....

மறுபடி ஒரு புல்லை எடுத்து அதன் பின் புறம் செல்லமாய்த் தட்டி தலை திருகி கோப்பையில் ஊற்றினேன்....ஐஸ் கியூப்ஸ் எடுத்து மிதக்கவிட்டு....

அடுத்த மிடறுக்கு முன்னால்....

மீண்டும் கைகளை பின் தலைக்கு கொடுத்து கட்டிக் கொண்டு.....நினைவுகளின் இசையில் மூழ்க ஆரம்பித்திருந்தேன்....!

எழுதியவர் : Dheva.S (22-Feb-13, 8:08 pm)
பார்வை : 216

மேலே