தாய்

இரவு முழுவதும்
கணினியோடு உறவாடிக்
கண்ணயர்ந்த போது
கைபேசி அழைப்பு!

நெருங்கிய நண்பனின்
அன்புத் தாயாரின்
மறைவை அறிவித்த
மரணச் செய்தி!

கையிலும் ,பயிலும்
தேடிப்பார்த்துக்
கிடைத்த தொகையினை
எடுத்துக் கொண்டேன்!

நாலாவது தெருவில்
நண்பன் வீடு!
நான்கே எட்டில்
அவனை அடைந்தேன்!

அருகில் சென்றேன்
அணைத்துக் கொண்டேன்!
அன்னையின் துக்கம்
பகிர்ந்து கொண்டேன்!

அம்மா! அம்மாவென
அலறியவனின்
பிரிவுத் துயரினை
ஆறுதல் படுத்தினேன்!

பிறந்தபோதே
தந்தையை இழந்தவன்
தாயையும் இழந்ததில்
தவித்துப் போனான்!

அவனுக்காகவே
வாழ்ந்த தாயோ
அமைதியாகவே
படுத்திருந்தார்!

அடுத்தடுத்த நிகழ்வுகளை நான்
அமைதியாகச் செய்துவிட்டு
எட்டுக்கால் வாகனத்தின்
இரு கால்களாய் மாறிப்போனேன்!

கணவனை இழந்த அவ்வன்னை
கடந்து வந்த காலங்களை
மெதுவாய் மனதில் மென்றபடி
சுடுகாடு நோக்கி நடந்து சென்றேன்!

கட்டட வேலை செய்தாலும்
கண்போல் அவனைப் பார்த்துக் கொண்டு,
துக்கம் அனைத்தையும் தனக்குள் வைத்துத்
துன்பமின்றியே அவனை வளர்த்தார்!

எங்கங்கோ அலைந்து திரிந்து
எப்படியெல்லாம் படிக்க வைத்தார்!
ஊர் மெச்சும் பிள்ளையாக
உருப்படியாய் வளர்த்து விட்டார்!

அனைத்தும் முடிந்த பின் அவனை
ஆரத்தழுவி ஆறுதல் படுத்தித்
தேறுதல் சொல்லி வீடுவந்தேன்,எனைத் தேற்றுவார் இன்றி நான் தவித்தேன்!

எழுதியவர் : கோவை ஆனந்த் (27-Feb-13, 4:37 am)
பார்வை : 146

மேலே