குழந்தைகளைத்தேடும் கடவுள் நூல் விமர்சனம்

நூல் குழந்தைகளைத் தேடும் கடவுள்
ஆசிரியர்; கவிஞர் ச.கோபிநாத்
விமர்சனம்:கவிஞர் வாலிதாசன்

நடுநிசிக் காலப்பொழுதொன்றின் அமைதியின் இன்பத்தை அனுபவிப்பவனாய் இந்தக் குழந்தைகளைத்தேடும் கடவுள் நூல் வாசித்தபொழுது உணர்ந்தேன்,வெளிக்கொணர இயலாத வெட்கத்தையும் வேதனையும் நிறைந்ததைப் போல் அமைந்திருந்தன, முகப்பு அட்டைப் படம், இந்த நூலினை முற்ற முழுக்கப் படித்தால் நான் சொல்லும் கருத்துப் புலனாகும்,பேரின்ப வாழ்க்கையென்பதை குழந்தைப் பருவ மகிழ்வென அறிகிறோம், நன்றாக உற்றுக்கவனித்தால் குழந்தைப் பருவம் மட்டும் தான் முதுமைப் பருவம் வரை வரும்,இடையிடையே வரும் பருவங்கள் ஒவ்வொரு பருவம் கடந்த பொழுதும் காலப்போக்கில் காணாமல் போய்விடும்.குழந்தைகளின் ஆன்மா கொஞ்ச கொஞ்சமாக அல்லாமல் வேகவேகமாக அழிக்கப்பட்டு வருகின்றது என்பதைஇவரின் அநேகக் கவிதைக்காட்டுகிறது.

இந்தநூலில் இடம் பெற்றுள்ள நூற்றைம்பத்தாறு குறுங்கவிதைகளில் போற்றத்தக்க கவிதைகள் பலவும் விமர்சனத்துக்குரிய இருபது கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. கவிதை நூலில் கவனிக்கப்படக்கூடிய கவனத்துக்குரிய பாடுபொருள் தேர்வு தான் அதை சாத்தியப்படுத்தும், அதை நூலாசிரியர் கவனமாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். நூலின் கவிதைகளுக்குள்ளே நாம் திறந்த மனதோடு செல்கையில் வரும் போது நிறையப் பொருளோடு மனதில் கொண்டு வர இதில் பல இருக்கின்றன.
திசைத் திரும்பின
தாகத்துடன் பறவைகள்
வறண்ட குளம்
இந்தக் கவிதை நேரடியாக ஒரு பொருளையும் குறியீடாக மற்றொரு பொருளையும் தருகிறது, தாகத்தோடு வந்த பறவைகள் வறண்ட குளத்தைக் கண்டு திரும்பின இப்படியொரு கோணத்திலும், மற்றொரு வகையில் அந்தப் பறவை இங்கிருக்கும் போது குளம் நிறைய நீர் இருந்து, அது இடம்விட்டு வெளியே சென்ற பின் அலைந்து திரிந்து பல நாள் கழித்து தாகம் வாட்டி தன் பூர்வீக இடம் நோக்கி வருகின்ற காலத்தில் குளம் வறண்டு இருக்கிறதைக் காட்சிப் பிடித்திருப்பது என் இதயக்கேமிரா கவனமாகவும் அதையும் தாண்டி மீண்டும் பதிவு செய்து மகிழ்கிறது.

குழந்தகளுக்கான மனநிலை குழந்தைகளுக்கானதாக இல்லையென்பது இந்தச் சமூகம் திணிக்கிற அழுத்தங்களும் அபகரிப்புகளும் தான் என்பதை நூலில் பல இடங்களில் ஆதங்கக் கோபமிடுகிறார் கவிஞர். முன்னம் சிறார்களுக்கு பொறுமை குணம்,பக்குவப்படல், சகிப்புத்தன்மை,தேடுதல் நோக்கம் போதித்தது விளையாட்டுகள், மண்சார்ந்த விளையாட்டுக்கள், ஆனால் இன்று வணிக விளையாட்டுகளால் குழந்தைகள் மதிபிறழ்ச்சிக்கு ஆளாகுகின்றனர், கணினி விளையாட்டில் அனைத்துவித ஆசைகளும் குழந்தைகளுக்கான குணநலன்களையே சூறையாடுகின்றன வணிக விளையாட்டுகள் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக
விளையாட்டு
வணிகமானது
மட்டைப் பந்து
மட்டைப் பந்து மட்டுமல்ல வணிக விளையாட்டுகள் அனைத்துமே.

இருபத்தியோறாம் நூற்றாண்டு வரை தொடர்கிற மகாஅவலமானது, கருக்கலைப்பு நடப்பது, கவிஞர் முகுந்தராஜன் அவர்கள் பெண்சிசு பற்றி அவளது தாய் புரிதலுற்றதைக் கூறும் அழகான கவிதை
மருமகள் வீசிய
இட்லியில்
கள்ளிப்பால் கொடுத்து
கதை முடித்த
மகளின் முகம் நிழலாய்.
என்கிற கவிதைதான் நினைவுக்கு வருகிறது, அன்று கள்ளிப்பால் கொடுத்து பெண்சிசுவைக் கொன்றனர்,ஆனால் இன்று மாதமாக இருக்கும் போதே இந்த அறிவியல் துணையோடு அழிப்பு வேலை நடப்பதை மூன்று நாலைந்து கவிதைகளில் குறிப்பிடுகிறார்
மருத்துவமனைகள்
சவக்கிடங்கானது
கருக்கலைப்பு.
இக்கால நாகரீகப்போக்கின் இலட்சணத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார் சமூக அக்கறையுடன் கவிஞர்.

அதிகம் பாடப்பட்டும்
அழகும் குன்றவில்லை
நிலா.
இந்தக் கவிதையில் கவிஞருக்கு ஒரு வினாவை வைக்கிறேன் அதிகம் பாடினால் அழகு குன்றுமென யார் சொன்னது? உண்மையின் அழகு ஒரு போதும் கெடாது.

இந்தக் காலம் இணைய காலம், இளையதலைமுறையினர் பலர் இணையத்தால் தான் சீரழிகின்றனர் என்ற பொதுவான கருத்து நிலவினாலும் மாற்றுச் சிந்தனையுடன் கவிஞர் சொல்வதைக் காண்போம்.
நன்று தீது
நம் தேடலில்
இணையம்
இது தான் ஞானப்பார்வையோடு சிந்தித்தல் என்பது ஒரு பக்கம் பார்க்காமல் இரண்டு பக்கமும் பார்த்துக் கூறுவது அதைச் சரியாகக் கவிஞர் எடுத்துக்காட்டியுள்ளார். நல்லதும் கெட்டதும் நம் கையிலே தான் என்பதை புரிய வைக்கிறார்.

என்னளவில் நடப்பு நிகழ்வைப் பாடாதக் கவிஞனை கவிஞனென்றே மதிப்பதில்லை, இந்தச் சமூகம் அவனுக்கு கொடுக்கிற மதிப்பில், அந்தச் சமூகத்தின் மீது அக்கவிஞனுக்கு அதைவிட அக்கறையும் பொறுப்புணர்வும் அதிகம் வேண்டுமெனக் கருதுவேன் நான். இதைக் கூர்ந்து வாசித்தால் இந்தக் கவிதையின் பொருள் புலப்பாடு அறிய வரும்.
அம்புகள் தோய்ந்த
சமாதனப் புறாக்கள்
வன்ம நிலம்
கண் முன் இலங்கை அட்டூழியம் விரிகிறது, சமாதனப் போர்வையில் வல்லாதிக்க நாடுகளும் இலங்கைக்குத் துணை நின்று தமிழீழப் போரை நடத்தி அழித்தொழித்தன இக்கவிதை மூலம் ஈழநிலம் குறித்து பொறுப்புணர்வோடு பதிவிட்டுள்ளார்.

நெடுந்தூரப் பயணம்
துணைக்கு வந்தன
நினைவுகள்/
இறகுகளின் அடியில்
இளைப்பாறுகின்றது
தாய்மையின் கொடை/
உதிரும் இலை
தாயாய் தாங்கியது
நிலம்/
மனம் கவர்ந்து கவிதைகள் இது போல நிறைய உள்ளன.

குறுங் கவிதை வாசித்த கணம் அதிகம் நினைவில் நெஞ்சில் பாதித்த கவிதை ஏராளமாக இந்நூலில் இருக்கின்றன, கூறியது கூறல் குற்றமாகி விடும் வண்ணமாக கருக்கலைப்பு, சலனம், குழந்தை விளையாட்டு சில வார்த்தைகள் கவிதைகளில் மீண்டும் மீண்டும் வந்து சலிப்படையச் செய்துவிடுகிறது, வரும் காலங்களில் தவிர்த்து மேன்மை அடைய, சாதனைகள் பல புரிய வாழ்த்துகள். குழந்தை மனசுக்கார கவிஞரை கடவுள் கண்டிப்பாக பாராட்டி மகிழத்தேடுவார்.

எழுதியவர் : -வாலிதாசன்- (28-Feb-13, 2:08 am)
சேர்த்தது : mukavaivaalidhasan
பார்வை : 159

சிறந்த கட்டுரைகள்

மேலே