ஆசிரியரும் குருவும்

ஆசிரியரும் குருவும்

நடைமுறையில், எம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆசிரியர் யார், குரு யார் என்பதைத் தீர்மானிப்பதில் தடுமாற்றம் காணப்படுகின்றது.

ஆசிரியரைக் குரு என்பதும் குருவை அசிரியர் என்பதுமாக நாம் குழப்பமடைந்துள்ளோம். பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர் ஒருவரை அவருக்கு விசேட மதிப்பைக் கொடுப்பதற்காக குரு என்றும் குறிப்பிடுகின்றோம்.

கலை உலகில் இந்தப் பிரயோகத்தை நாம் காணலாம். உதாரணமாக, நடனக் கலையைக் கற்பிக்கும் நடன ஆசிரியரை நடன அரங்கேற்ற மேடைகளில் குரு எனக் கௌரவிக்கப்படுவதைக் காணலாம்.

ஒருவர் ஆசிரியரா அல்லது குருவா எனத் தீர்மானிப்பதில் அடிப்படையாகக் கொள்ளப்படும் விடயம் எது என்பது தான் ஆசிரியருக்கும் குருவுக்குமான வேறுபாட்டைக் கொடுக்கின்றது.

மாதா,பிதா, குரு, தெய்வம் என்பதில் குறிப்பிடப்படும் குரு என்பவர் ஆசிரியராக இருப்பின் ஒருவருக்கு எத்தனை குருக்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அதேபோன்று 'தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்பதில் தாரம் ஒன்று குரு ஒன்று என்பது வெளிப்படையானதே.

இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது, நாம் பல ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்கிறோம் ஆனால் குரு தாரத்தைப் போல் அமைய வேண்டியதாகின்றது என்பதே. இங்கு அமையவேண்டியது என்பது எமது தேடலின் அடிப்படையில் இடம்பெறுகின்றது என்பதாகும்.

இப்போது ஒரு ஆசிரியரின் செயற்பாடு என்ன என்பதைப் பார்ப்போம். ஒரு ஆசிரியர் தான் கற்றுக்கொண்ட அறிவை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவராவார். அதாவது, ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை (Knowledge) மாற்றம் செய்பவர் ஆசிரியராவார்.

இவ்வாறு அறிவை மாற்றம் செய்யும் ஆசிரியர்கள் தமது அறிவை பாடசாலை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவர்கள் மட்டுமல்ல, கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் என முன்னோர்கள் கூறியவற்றைக் கற்றுப் பெற்ற அறிவை பிறருக்கு மாற்றம் செய்பவர்களும் ஆசிரியர்களே.

இதே போன்றே கலைகளிலும் தாம் கற்றுக் கொண்ட அறிவை இன்னொருவருக்கு மாற்றும் போது அவரும் ஆசிரியராகின்றார். அப்படியாயின் குரு என்பவர் யார்?

குரு என்பவர் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்துகொள்ளலை (understanding) கொடுப்பவராவார். இங்கே அறிவுப்பரிமாற்றம் இடம் பெறுவதில்லை. அறிவுப்பரிமாற்றமானது மனம் சார்ந்தது.

ஆனால் குருவால் கொடுக்கப்படும் புரிந்துகொள்ளல் என்பது உள்ளுணர்வு சார்ந்ததோடு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானதாயும், தனித்துவமானதாயும், வார்த்தைகளின் விளக்கங்களுக்கு அப்பாற் பட்டதாயும் அமையும்.

எனவே ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை மாற்றம் செய்பவர் ஆசிரியர், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்து கொள்ளலைக் கொடுப்பவர் குரு.

எமக்குக் கிடைப்பது அறிவு சார்ந்ததா அல்லது உள்ளுணர்வு சார்ந்ததா என்பதன் மூலம் கொடுப்பவர் ஆசிரியரா அல்லது குருவா என்பதைத் தீர்மானிக்கலாம்.

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (28-Feb-13, 10:02 pm)
பார்வை : 731

மேலே