[421] கட்டுரை: நான் ரசித்த காதல் வரிகள்....

காதலைப் பற்றி எல்லோருக்கும் கேட்கவும் படிக்கவும், ஏன், எழுதவும் கூட ஆசைதான்.
இதோ நான் ரசித்த சில காதல் வரிகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி எடுத்துக்கொள்கிறேன்:
****
ஜே.நம்பிராசனின் -முத்தத்தின் நிறைகுடம்..:

நீ விவசாயி
நான் விளைநிலம்
என்னுள் போகத்தை விதைத்து
முத்தத்தை அறுவடை செய்கிறாய்..
***
உன் ஒவ்வொரு முத்தமும்
ஒரு முள்
அதை
மறுமுத்தத்தால்தான்
எடுக்கவேண்டும்..
***
யுத்தங்கள் -இரு நாடுகளைப் பிளவுபடுத்தும்
சத்தங்கள்-இரு செவிகளை ரணப்படுத்தும்
முத்தங்கள்-இரு இதயங்களை வசப்படுத்தும்.

=======================================
அமுத சுரபியின் -'காதல் உயிரியல்'

கவிதை
சோறு போடுமோ
போடாதோ
நீ
சோறுபோடும் கவிதை..
***
மனதைத் துளைத்து
காதல் புகட்டி
குறுகத் தரித்தது,உன்
குரல்..
***

கிடைத்துக்
கேட்காமல் நீ
கேட்டும்
கிடைக்காமல்
நான்!
***

தேவையின்றி
வதைப்பவள்
தேவதை..
***
+++++++++++++++++++++++++++++++++++++

ஈசாக்கின் 'மௌனங்களின் நிழற்குடை'

உன் பொய்க்கோபம் பற்றி
எனக்குத் தெரியாதா
கிள்ளியவன் என்பதற்காக
மணம் வீசவா மறுக்கும்
மல்லிகை..!
***

எண்ணெய் தேசத்தில்
பணியாற்றுபவதென்னவோ நீ
என்ன கொடுமை
அணைக்க முடியா நெருப்பாய்
கொழுந்துவிட்டு
எரிந்துகொண்டிருக்கிறேன் நான்!
***

ஏன் இப்பொழுதெல்லாம்
கோபமாகப் பேசுவதில்லை..
என்மீது கோபமா..?
***

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (1-Mar-13, 2:42 pm)
பார்வை : 263

மேலே