இளமை நட்பே! இனிமை நட்பே!...

பாடித் திரிந்ததும்
ஆடித் திரிந்ததும்
ஓடித் திரிந்ததும்
என்றும் கண்முன்னே!

வெட்டிப் பேச்சு
வீண் அரட்டை
ஊரார் திட்டல்
என்றும் நினைவினில்!

கையில் கிடைத்ததை
படித்தோம்
பையில் இருப்பதை
அழித்தோம்!

கண்டதையும் பிடித்து
ஆராய்ந்தோம்
காணாததையும் படித்து
கனவுகண்டோம்!

சேர்ந்துபார்த்த
சில படங்கள்
சேர்ந்துநின்ற
பல விழாக்கள்!

இவைதாமே நமக்கு
இளமையை வளர்த்தன!
இவைகளால்தானே நம்
இளமை வளர்ந்தது!

சொந்தஊர் சுற்றியது
போதுமென சொல்லியே
சொத்துசுகம் தேடியே
அயலூர்க்கு வந்தோமே!...

நீயொரு வழியில்
நானொரு வழியில் - உலகே
நம்மை பிரிக்கும் வழியில்
நம் நட்போ தனிவழியில்!

ஒருகணம் நிற்கிறேன்
உன் பெயரிட்ட
கடைகளில்
மறுகணம் நிற்கிறது
நம் நட்பிட்ட
பல கணங்கள்!

எப்போதாவது சந்திப்பு
சில மணித்துளிகள் - அது
எப்போதுமே இருந்திடும்
பல நாட்கணக்கில்!...

நட்பே! நாளும் வளரும் நட்பே!
நட்பே! நாட்களை வளர்க்கும் நட்பே!
நட்பே! என் இளமை நட்பே!
நட்பே! என்றும் இனிமை நட்பே!...

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (5-Mar-13, 8:23 am)
பார்வை : 490

மேலே