நான் காவல் காக்கும் என் சாதி...

எந்த நூற்றாண்டிலிருந்து....
நான் இந்த சாதிகளுக்குக் காவல்காரனாக
அவதாரம் எடுத்தேன் என
எனக்கே தெரியவில்லை.

நான் வைத்துக் கொள்ளாத
எனது பெயரைப் போல...
எனக்குச் சம்பந்தமில்லாத இந்தச் சாதியும்...
எப்படி என்னைக் கொத்தடிமை ஆக்கிற்று
எனத் தெரியவில்லை எனக்கு.

எனக்குத் தெரியாமல்
எத்தனையோ...தலைமுறைகளுக்கு முன்னால்
நான் விலைபேசி சாதிகளிடம்
விற்கப்பட்டு இருந்தது...
எனக்கு அவமானமாய் இருக்கிறது
எனதிந்தக் காலத்தில்.

துப்பாக்கிகளும்...வேல் கம்புகளும்...
நாட்டு வெடி குண்டுகளும்...சாராயமும்...
துணையிருக்கும் சாதிகளை...
எதிர்ப்பது எளிதாய் இருப்பதில்லை...
நமதிந்தக் காலத்தில்.

இரத்தத்தில்...
சிவப்பாய் நிறமோடி இருக்கும் சாதி...
அதைப் பழிப்பவனின் உடலிலிருந்து வெளியேறி..
உயிரற்றவனாக்கி விடுகிறது அவனை.

அக்குளில் துண்டோடு...
காலில் செருப்பற்று சுடுமணலில்...
ஒருவனை நடக்கச் சொல்லும் சாதி....

இன்னொருவனை...ஆண்டையாக்கி....
எகத்தாளம் செய்யச் சொல்கிறது...
அது தலைவிரித்தாடும் வீதியெங்கும்.

செத்தபின்னும் பாடையில் ஏறி...
என் வீதி வழி வராதே...
என வெறிக் கூத்தாடும் இந்தச் சாதியோடு..

பிரிக்க முடியாத அசிங்க "மரு" என..
ஒட்டி நான் பிறந்து...
இந்தக் கணம் வரை...

சாதித்ததென்ன?..என
எனக்கும் தெரியவில்லை...
உனக்கும் தெரியவில்லை.....
என்றாலும்...

உனக்காக நான் எழுதும் கடிதத்தில்...
உன் சாதிப் பெயர் இல்லாமல்
உன் பெயரை எழுதியதில்...
என் நட்பை விலக்கி..

நீ கொண்டாடும் இந்தச் சாதியிலிருந்து
உனக்கும்..எனக்கும்...
எப்போது விடுதலை...என எழுதித்தர..

உன் சாதிக் கடவுளாலும்...
என் சாதிக் கடவுளாலும்...

இந்தக் கணம் வரை முடியவே இல்லை.

எழுதியவர் : rameshalam (6-Mar-13, 12:40 pm)
பார்வை : 138

மேலே