வணங்குகிறேன் தாயே !
ஆழ் கடலில் முத்தெடுத்து ,
அடி வயிற்றில் கரு வளர்த்து,
உதிரத்தில் உருக்கொடுத்து ,
உணர்வில் உயிர் வளர்த்து,
உன் உயிர் வதைத்து,
எனை கொணர்ந்தவளே !
உண்ணும் உணவிலும்
ஒவ்வாமை வந்து விடக் கூடாதென்று
உன் உணவாசைகளை ஓரம் கட்டி
எனக்கமுது ஊட்டியவளே!
எட்டி எட்டி உதை என,
என் பிஞ்சு கால்களை நெஞ்சில் அழுத்தி, மகிழ்ச்சியில் திளைத்தவளே!
நீ பிரியப்பட்டு கேட்டதை எல்லாம்
நான் விசனப்பட்டு எட்டி உதைச்சேன்.
எட்டி உதைச்ச என் கால் வலிக்குமென்று ஏச்சுக்கும் பேச்சுக்கும் நடுவிலேயும்
அந்த காலையும் தடவி விட்ட தாய் நீயே!
அது தான் அம்மா பாசம் என
அப்போ அறிய மறந்துபுட்டேன்,
மரக்கட்டையாய் இருந்துபுட்டேன்.
இப்போ மனம் மாறி திருந்திபுட்டேன். மன்னித்துவிடு தாயே
உந்தன் மாண்புதனை மறந்ததற்கு!
தெய்வம் நேரில் வந்ததில்லை
நீதான் தெய்வம் என்று
நிதர்சனமாய் உணர்ந்துவிட்டேன்.
மன்னித்துவிடு தாயே!
என் மகளாய் பிறந்துவிடு நீயே!
மதித்து அன்பு பதித்து,
நித்தம் வளர்த்து,
வணங்குவேன் தாயே!
நித்தம் வணங்குகிறேன் தாயே!