பள்ளி நாட்கள் -. சில கல் சிலேட்டுக்குள் புதைந்த கல்வெட்டுக்கள்
.......................................................
“உச்சி மீது நின்று தாத்தா
உடல் குலுங்க தும்மினார்
அச்சி அச்சி என்றபோது
அவை அனைத்தும் பறந்தன”
.............................................................................
சிகப்பு மையில் எழுதப்படும் எழுத்துகளையும் .. சுவற்றில் நீல சாயத்தில் எழுதபட்டிருந்த திருக்குறளில் எனக்கு தெரிந்த அனா ஆவன்னா வை தேடி பார்த்திருந்த படியே இவருதான் காக்கா மார் சொன்ன ஓந்தான் மண்டை ஹெட்மாஸ்டரா ..என்று அவர் தலையை ஓந்தானோடு ஒப்பிட்டபடியே .. அச்சத்தோடு பள்ளியின் முதல் நாள் எனக்கு துவங்கியது ....
எல்லோரும் சொல்லும் எலிமோண்டி ஸ்கூலில் நுழைந்தவுடன் ஓட்டு சட்டத்தில் எலிகளை தேடிய நிமிடங்கள் தான் என் பள்ளி நாளின் முதல் துளிகள் .. என்றும் நினைவில் வரும்..என் மழலை முகம் ...
புலிப்படம் போட்ட தமிழ் புத்தகமும் ,விஜியம்மா டீச்சரும் காட்சி படமாக கண்முன்னே தோன்றினர் ...பள்ளிநாட்களை நினைவு கொள்கையில் ...
கொடுக்காபுளிமரமும் ,ஈச்சமரமும் தண்ணீர் குடிப்பதற்கான அடிபம்பும் ஆங்காங்கே வளர்திருந்த செடிகளும்,ஓரமாய் ஊர்ந்து செல்லும் ஆயிரங்கால் பூச்சியும் மெஹருன்னிஷா கடித்து எறிந்த நெல்லிகாயை சுவைத்து கொண்டிருந்த அணிலும் என் முதல் வகுப்பு நாட்களில் என்னை அதிகம் ஈர்த்தவைகள்.
கசடதபற வல்லினம் ஙஞணநமன மெல்லினம் விஜியம்மா டீச்சரின் குரலோடு நெஞ்சிக்குள் இன்றும் ஒலித்துகொண்டிருக்கும் உயிருடனும் மெய்யுடனும்கலந்த உயிர்மெய் எழுத்துக்கள்.
மரத்தூண்களில் செவிசாய்த்து விரல்களால் தூணை சுண்டி இசையை ரசிக்க கற்ற இனிய நாட்கள் முதல் வகுப்பு நாட்கள் .ஆம் பள்ளிநாட்களில் பள்ளிக்கூட தூண்கள் கூட ஏதோவொன்றை நமக்கு கற்றுத்தந்து கொண்டுதான் இருந்தன.
அவ்வல் கலிமா தையுபு என்றே துவங்கும் கடவுள் வாழ்த்துக்களும்,”தேவே உன்னை போற்றிடுவோம் தினமும் என்னை காத்திடுவாய்” ....வகுப்பறை கடவுள் வாழ்த்துக்களில் உரக்க கத்திய ஓசைகளையும் . .ஜனகன மனவின்கடைசி வரிகளில் வைலட் அக்காவின் கரங்களையும் கட்டபட்டிருந்த மணியையும் பார்த்தபடி கதவருகே நழுவும் கால்களையும் மறந்துவிட முடியுமா என்ன ....
அர்த்தம் தெரியாமலேயே மனதில் பதிந்த பகுத்துண்டு திருக்குறளும் ,
தமிழ் தாய் வாழ்த்தும் கல்சிலேட்டுகளுக்குள் பதிக்கப்பட்ட முதல் கல்வெட்டுக்கள் ..
ஓட்டு சட்டங்களில் ஓசை எழுப்பியபடியே ஓடி திரிந்த அணில்களுடனும் ,படக்கதைகளில் வரும் ஆடு, சிங்கத்துடனும் , “கரும்பு இனிக்கும் “ பக்கத்தில் உணர்ந்த சுவையின் பெயார்களுடனும் என் கற்றலின் அகரம் ஆரம்பமாயின என் முதல் வகுப்பில் ...
..................................................................................................................................................
“ஓர் எலி ஓடி வந்து வட்டமிட்டதாம்
ஒரு நெல்லை கொத்தி தின்று தூங்கி விட்டதாம்
இரண்டாம் எலி ஓடிவந்து எழுப்பிவிட்டதாம்”
..................................................................................................................................................
இரண்டாம் வகுப்பில் எல்லோராலும் தூங்கு மூஞ்சி சார் என்று நம்பப்பட்ட செல்லப்பா வாத்தியாரிடம் பாடம் பயின்ற காலங்களில் நட்பை கற்றுகொண்டோம் . நட்பின் பாட தலைப்புகளாய் வந்து இணைந்த முகங்கள்
நசிர்,ஹக் ,பீர் ,அசன் அலி ,ஷரிபுத்தீன் ,இரட்டை சகோதரர் போல் அலுமினிய புத்தக பெட்டியுடன் அமர்ந்திருந்த முகைதீன் மற்றும் சுல்தான் . என நட்பு கற்பிக்க பட்ட நாட்கள் .எத்தனையோ பிரிவுகளிலும் இதயத்தால் இனைந்து இன்றும் தொடரும் நட்பின் பரிமாணங்களுக்கு அச்சாரமிட்ட அழகு நாட்கள் .. அவைகள் .
நண்பனை வெள்ளையா வாத்தியார் அடித்து விட்டார் என்பதற்காக அவர் மண்டையை செங்கலால் குறிபார்த்து அடித்து “நோட்டங்கை” என்ற ஒரே
அடையாளத்தில் மாட்டிகொண்டு.. வீட்டில் அடிவாங்கிய பொழுதுகள் ...
காலாட்டிய படியே கண்ணயரும் செல்லப்பா வாத்தியாரின் தூக்கங்களுக்கு இடையில் கோடு கிழித்து குச்சிகளை சுண்டி விளையாடிய பொழுதுகள் ..
சத்துணவு பல்பொடியை காட்டாயம் வாங்கி தின்று ரசித்த அறியாமை பொழுதுகள் ..
சத்துணவை வீட்டிற்க்கு எடுத்து செல்லும் மலையரசனுடன் சென்று பனைகொட்டை பொறுக்கி பதநீர் குடித்து ஊர் சுற்றி திரிந்த சுதந்திர மான வகுப்பு நாட்கள் ..
நட்பினை விதைத்து நண்பர்களோடு இணைந்து விளையாடிய பருவமாய் கழிந்த இரண்டாம் வகுப்பு நாட்கள் ...
...............................................................................................................................................
” வானத்திலே திருவிழா வழக்கமான ஒருவிழா”
.................................................................................................................................................
மூன்றாம் வகுப்பில் எழுத்துக்களுக்கு மூக்கு வைக்க கற்று கொடுத்த டோனாவூர் டீச்சர் வாசிப்புகளையும் மனப்பாடங்களையும் எழுத்துக்களையும் கற்று கொடுத்து விழியின் பயனுணர்ந்த நாட்களில் பள்ளிநாட்களின் வசந்த காலங்கள் பூக்க துவங்கின ..
உப்பாற்று ஓடையில் பறித்து வந்த ஊமத்தங்காய் ,இலைகளுடன் கரி சேர்த்து குழைத்து கரும்பலகைக்கு கருப்படித்து அறிவிற்கு வெள்ளையடித்து கொண்ட நினைவுகள் .
ஆத்திசூடி ,கொன்றைவேந்தன் ,உலகநீதி ,மூதுரை இலக்கியத்தில் நீந்தி காலம் தவறா காந்தியடிகளையும் ,அழிக்காமல் கோட்டை சிறிதாக்கிய பீர்பால் தத்துவமும் ,சித்தார்த்தன் புத்தன் ஆன வரலாறுகளையுமாய் படிப்பின் பட்டியல்கள் நினைவுகளில் பசுமரத்தாணியாய் அகலாமல் நிற்கின்றன அரசு பள்ளி என்றால் அவலமாய் பார்க்கும் வியாபார கல்விசிறையில் விலங்கிட்டு கொண்ட விழிகளுக்கு எதிரில் முதுகுயர்த்தி நிற்கும் அன்றைய கல்வி தரம்.
.................................................................................
“முன்னொரு நாளில் மதுரை எனும்
மூதூர் தனிலே ஒரு வணிகன் .
பொன்னன் என்பது அவன் பெயராம் .....”
.....................................................................................
நான்காம் வகுப்புகளில் தரையில் இருந்து மரபெஞ்சிற்கு உயர்த்த பட்டிருந்தோம் .. புதிய பள்ளிகூடத்தில் படிப்புகளுக்கு இடையில் தேள் அடித்து .. பாம்புகளை துரத்தி வீரமும் தைரியமும் வளர்த்து கொண்ட பருவங்கள் ...
அட்டவணை படி புத்தகம் எடுத்து செல்லும் புதிய கலாச்சாரம் புகுத்த பட்ட பருவங்கள் .
பள்ளிக்கு வெளியில் கூடாரம் அமைத்து பறவைகளை தேடி மயில்களை பார்க்க மேற்கு நோக்கி சுதந்திரமாய் சிறகடித்த இளவேனில் நாட்கள் ...
செட்டியார் கடையில் டீச்சருக்கு மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்து கணக்கு பயின்ற நாட்கள் என துள்ளி திரிந்த வாழ்வின் வசந்த காலங்கள் ஆரம்ப பள்ளி நாட்கள் ..
வகுப்பறையில் வாழ்ந்த காலங்களை விட பள்ளிகளுக்கு வெளியில் நம்மை வரவேற்ற வசந்தங்கள் பள்ளிநாட்களின் பசுமை நினைவுகள் .
வீட்டில் காக்காமார்களிடம் திருடி படித்த பேய் கதை மன்னன் பி.டிசாமியின் திகில் கதைகளும் ,ஜேசப்பா வீட்டில் வாசித்த சோவியத் யூனியன் ,பூந்தளிரில் பதிந்த கபீஷ் குரங்கும் ,ராணி காமிக்ஸ் நாயகர்களும், நம் வாசிப்பை விரிவு படுத்தி அறிவின் தேடலை விசாலமாக்கியவைகள்
பள்ளிவாசல்களில் நபிமார்களை பற்றி கற்றுகொண்டவைகள் , அப்பா மார்களிடம் ஒலிநாடாவில் கேட்ட அபு ஹனிபா சரித்திரங்களும் நூறு மாசாயில்களும் பள்ளி பருவத்தை அழகுபடுத்தி அறிவை பாதித்தவைகள் .
படுகளதிருவிழாவில் வரும் யானையின் சாணத்தை மிதித்தால் அறிவு வரும் என்று போட்டி போட்டபடி யானையின் சாணம் மிதித்த வேடிக்கை காலங்கள் .
மயில் இறகுகள் குட்டிபோட்டன .. எங்கள் பாட புத்தகத்தில் ..தட்டான் தலையை தரையில் புதைத்தால் காசு வரும் என்ற கண்டுபிடிப்புகள் மறக்க முடியா மழலை நினைவுகள் .
தெருவில் சுதந்திரமாய் அலையும் அப்பாஸ் அப்பா வீட்டு ஆடுகளையும் .
வீட்டு அருகில் சுற்றும் மாடுகளையும் மேய்த்து ஆட்டின் பால் கறந்து கண்களில் தேய்த்து மருத்துவம் கற்ற பொழுதுகள் .
சாய கட்டிகளை கரைத்து சுவற்றில் உதய சூரியன் வரைந்து அரசியல் கற்ற பள்ளிக்கூட மதில் சுவர்கள் .
அதிகாலை தொழுதுவிட்டு நண்பர்களுடன் உப்பாற்று ஓடை நீரில் நடந்து நீரில் மிதந்து ஓடும் அரளிபூக்களை ரசித்து கோவை பழங்களை ருசித்து குளித்து பின் குளித்து பின் குளித்து வீடு வருகையில் வீட்டில் விசிறி கம்புகள் நம்மை முறைத்து கொண்டிருக்கும் .
தீபெட்டிக்குள் அடைக்கப்பட்டு ஒழி எழுப்பும் கீ..பூச்சிகளும் ,ஆங்காங்கு அலைந்து சேகரித்த பொன்வண்டுகளும் ,வித விதமாய் விரல்களில் தவழ்ந்த வெட்டுக்கிளிகளும் ,ஓடைமுள்ளில் பிடிக்க பட்டு நம் சிலேட்டுகளில் வட்ட மிட்ட மாடு என்றே அழைக்க பட்ட வெட்டு கிளிகளும் இயற்கையோடு இணைந்து நாம் கழித்த சுகமான தோழமை பொழுதுகள் ..
தட்டான் பூச்சிகளின் வாலில் நூல் கட்டி பறக்க விட்டு ரசித்த ஆகாயங்களும்
பல்வேறாய் வகை படுத்தி நம்மால் புலிதட்டான்,மயில் தட்டான் யானை தட்டான் ,ஊசி தட்டான் பெயரிடப்பட்டு நம் விரல்களோடு தவிழ்ந்திருந்த பூச்சிகளிடம் நாம் கழித்த பொழுதுகள் எல்லாமே பள்ளி நாட்கள் எனும் பருவக் காற்றில் சாரல்களை போல் விழியோரத்தில் நீர்த்துளிகளை உதிர்த்து விடத்தான் செய்கின்றன .
நகரத்து சூழலில் வேனுக்குள் சிறைபட்டு புத்தக சுமைகளுடன் குறுகிய வீட்டிற்குள் முடங்கி உலகை காணும் நவீன குழந்தைகளின் பள்ளி நாட்களின் பசுமைகள் கூட அண்மையில் குடிவந்த குரோட்டன்ஸ் செடிகளை போலவே வாசமில்லா வண்ணங்களுடன் தான் பதிவாகி போகின்றன ...
ஒரு கல் சிலேட்டுக்குள் புதைந்து போயிருந்த கல்வெட்டுக்கள் நவீன கல்விமுறைகளில் காணாமல் போயிருந்த கல் சிலேட்டுகளை போலவே ..புதைந்து போய்விட்டன .
இன்னும் எழுதலாம் .. எழுதப்படும் எழுத்துக்கள் எல்லாமே ..நம் எல்லோரின் மனதிற்குள்ளும் புதைந்து போயிருந்த..பள்ளி நாட்கள் எனும் கல்வெட்டுக்கள் தானே ..
இந்த எழுத்துக்கள் உங்களை அதன் திசை நோக்கி பயணிக்க செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன் .
(முகநூலில் பகிர்ந்து கொண்ட நினைவுகள் தள நண்பர்களின் நாட்களையும் அசைபோட செய்வதற்காக )

