என் செல்ல நாய்க்குட்டி...!!
அன்றுதான்
கண்டேன்
சேரித்தெருவை கடந்தபோது
அதை...
குப்பை தொட்டியின்
ஓரத்தில் குனிந்து படுத்து
முனகிக்கொண்டிருந்தது
பாலுக்காகவோ,
பாசத்துக்காகவோ
தெரியவில்லை...
ஓடிச்சென்று அள்ளியெடுக்க
தூண்டியது
அதன் அழகு,
இருந்தும்
அதன் அழுக்கு இருப்பிடம்
எனை அருகில் செல்ல விடவில்லை...
கூர்ந்து குறு குறு என பார்க்கும்
விழிகள்,
வெள்ளை நிறத்திலான புருவத்தோடு
கறுப்பு மீசை முடி,
குத்திட்டு நின்ற செவிகள்,
என்று குறிப்பிட்டு சொல்லும்படியான அழகுகள்...
எங்கோ ஓர்
பெட்டை தெரு நாயின் ஊளை
தன் தாயுடையதோ
என எண்ணி முனகும் ஓசை
பசியால் பாதியிலேயே
நின்றுபோகிறது...
இன்னும் விந்தை பார்க்க -என்
குழந்தை மனதுக்கு
பொறுக்கவில்லை
கலங்கிய விழிகளுடன் வாரியணைத்தேன்,
செல்கிறேன்
இப்போது வீடுநோக்கி
அதை -என்
செல்லப்பிராணியாக்கிக்கொண்டு......