ஒரு வளர்பிறை விண்ணப்பம்......
புறாக்களினூடே
தானியங்களிறைத்துத் திரியும்
உன் பேரழகியல்
காட்சிப் பொதிவுகளில்
நிறைந்து வழிகிறது காதல்....
எனை நோக்கியே எனும்
பிரமைகள்
தகர்த்துத் தூக்கி
புதிர்கள் தூவிப் போகிறது
புருவ அசை விசைகள்...
நீ வரைந்திழுக்கும்
கோலங்கள் புனிதப்படுகின்றன....
உன் சுற்றுவட்டப்
பாதயாத்திரைகளில்...
ஏறிய தங்கம் கரைவதும்
எதிர்ப்படும் நான் உறைவதுமான
உன் மென்உஷ்ணங்களின்
குணம் தெளிவித்துப்போ.....
மற்றுமொரு முறை கடக்கையில்..
சிறுபிள்ளை கொஞ்சியழும்
உன் தோளேறிக் காதல்
மொழிய....
அள்ளியெடுத்துச் சம்மதிக்கிறாய்
தாய்மையெனும்
முத்தப் பதங்களோடு.....
இப்படியே எனக்கும்
செய்யேன்...
காதலைக் காதலோடு...
தாய்மையைத் தாய்மையோடு....