கருப்பு வெள்ளை (3-முடிவு)
லாரி கோவிலை அடைந்தது. முதலில் துள்ளி குதித்து இறங்கியது கருப்பு. சாதம் கொதிக்கும் வாசம் , குழம்பு கொதிக்கும் வாசம் இதற்கு மேலாக ரத்த வாடை எல்லாம் சேர்த்து அதை அரை மயக்கம் கொள்ள வைத்தது . ஆனால் இந்த வாடை இதற்கு முன்னால் அனுபவித்த மாதிரியே தோன்றியது. அந்த இடமும் அதற்கு பழக்க பட்ட இடமாகவே தோன்றியது. காரணம்?...அதற்கு தெரியவில்லை . ஆனால் நமக்கு... கருப்பு பிறந்த இடம் இதுவே . இங்கு ஏதோ தெரு நாயிக்கு பிறந்தது தான் கருப்பு. இரண்டு வருடங்களுக்கு முன்னால் கருப்பு பிறந்து பத்து நாட்கள் கூட ஆகாமல் இருந்த நாளில் கோபியின் குடும்பம் இதே மாதிரி வந்து இருந்த போது கோபிக்கு நாய்க்குட்டி பிடித்து போகவே அதை எடுத்து வளர்க்க ஆரம்பித்தனர் . இங்கு கிடைத்ததால் அதற்கு 'கருப்பு' என பெயரும் வைத்தனர்.
திக்கு தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியது. சுற்றியது. சட்ரென்று நின்றது. முகர்ந்தது ..பார்த்தது ...காலை தூக்கியது. ஈரமாக்கியது மீண்டும் ஓடியது. அதற்கு குஷி தாங்கவில்லை. தீடிரென்று உட்கார்ந்து எதையோ யோசித்தது. மீண்டும் ஓடியது. இதனை போல் ஒரு மனிதன் செய்தால் நிச்சயம் பைத்தியம் என்று கல்லை எறிந்து விடுவார்கள்.
எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை தீடிரென்று நாலைந்து தெரு நாய்கள் குலைத்துக்கொண்டே கருப்புவை நோக்கி ஓடி வந்தன. அவற்றின் கோர பற்கள் எல்லாம் தெரியும் படி உறுமிக்கொண்டே மேலும் பக்கம் வந்தன.. கருப்பு தப்பித்தால் போதுமடா சாமீ! என்று எண்ணி தாவி குதித்து கோவில் முன்பு வந்தது .
கோவில் முகப்புக்கு கிழே ஒரு பெரிய அருவாள் செங்குத்தாக நின்று இருந்தது . அதனை சுற்றி நிறைய மனிதர்கள். கூட்டத்தினர் இடையே ஒரே ஆரவாரம்.. கையில் அருவாளுடன் ஒரு ஆள் குதித்து கொண்டு இருந்தான். இதனையும் கருப்பு நோட்டமிட்டு கொண்டே அருகில் சென்றது.
அந்த கூட்டத்தினரிடையே ஒரு ஆட்டின் தலை தெரிந்தது. கருப்புக்கு ஆர்வம் தாங்க வில்லை. கிடைத்த இடைவெளியில் உள்ளே புகுந்து நோட்டம்மிட்டது. தலையை காணவில்லை . தலையில்லா முண்டமாக ஆட்டை இருவர் பிடித்து நின்றனர். கருப்புக்கு ஒன்றும் விளங்கவில்லை. மித மிஞ்சிய ரத்தமும்..அதன் வாடையும் கருப்புவினை நிலை குலைய செய்தது. அதற்குள் அலங்கரிக்கப்பட்ட அடுத்த ஆடு வந்து நின்றது. மஞ்சள் தண்ணீரை அதன் மேல் ஊற்றினர். ஆடு சிலிர்த்துக்கொண்டு உடம்பை ஆட்டியது. கையில் அருவாளுடன் இருந்த பூசாரி அருவாளால் ஒரே போடு போட்டான். கருப்புக்கு மூச்சே நின்று போனது. கூட்டத்தில் இருந்து விலகி வந்தது.
உடம்பில் சக்தியே இல்லாது போக கருப்பு தூரத்தில் வந்து அமர்ந்தது. கூட்டத்தையே பார்த்துக்கொண்டு இருந்தது. கூட்டத்தை இணைப்பது போல் ஒரு நீண்ட வரிசை இருந்தது. ஆடுகளும் இருந்தன..அவற்றின் கழுத்தை இறுக்கிய கயிற்றை பிடித்து கொண்டு மனிதர்களும் நின்றார்கள்.
மனிதர்கள் இதனை பயங்கரமானவர்களா?..இவ்வளவு கொடூரமாக ஒரு உயிரை கொள்கிறார்களே?? அதுவும் இவ்வளவு ஆரவாரமாக, மகிழ்ச்சியாக...இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்து கூட்டத்தையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது.
சற்றென்று கருப்பு கண்ட காட்சி அதனை பிரம்மை பிடிக்க செய்தது. கயிற்றினை பிடித்து கொண்டு கோபியின் அப்பா..அம்மா...எல்லோரும்.கருப்புக்கு தூக்கி வாரிப்போட்டது. வெறிபிடித்தது போல் ஓடி வெள்ளையின் முகத்திற்கு நேரே நின்றது. அதன் முடிவு அதற்கு தெரிந்து விட்டதை போல தலையை சாய்த்து கருப்புவை பார்த்தது. கருப்பு தன் முகத்தை வெள்ளையின் முகத்திற்கு அருகில் சென்று வைத்தது. கண்களால் பேசி கொண்டன. கருப்பு தான் கண்டதை சொல்லிற்று. வெள்ளை தனக்கும் தெரியும் என்றது.
இதனிடையே வரிசை நகர தொடங்கியது. அந்த அருவளுக்கு வெகு அருகில் வந்து விட்டதை கருப்பு கவனித்தது. உடனே அப்பாவை பார்த்து "அப்பா! அப்பா!! வெள்ளையை விட்டுங்க..ஒன்னும் பண்ணாதிங்க..அவன் பாவம்" என கதறியது. அவர் சட்டை செய்யவில்லை. அம்மாவை பர்ர்த்து கெஞ்சியது. கோபியை பார்த்து முறையிட்டது. எல்லோரையும் பார்த்து கதறியது...ஓலமிட்டது..யாருக்கும் விளங்கவில்லை. வெறும் குறைச்சலாக மட்டும் தான் கேட்டது. காலில் விழுவது போல் அம்மாவின் சேலையை , அப்பாவின் வேட்டியை பிடித்து இழுத்தது... யாரும் மதிக்ககூடவில்லை. கோபி அதன் தலையை தூக்கி இறுக்கி பிடித்து கொண்டான்.
அந்த இடம் வந்தே விட்டது.
"ஆய் அந்த சனியன கீழே விட்டுட்டு சாமி கும்புடு" என்று பாட்டி அதட்ட கருப்புவினை கீழே விட்டு விட்டு கையை கூப்பி நின்று கொண்டான் கோபி.
மஞ்சள் நீரை ஊற்றினார்கள். வெள்ளை உடம்பை சிலிர்த்தது. பூசாரி அருவாளை ஓங்க தயாரானான். வெள்ளையை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கோபியின் காலுக்கு அடியில் புகுந்து பூசாரி மீது கடித்து குதற எண்ணி பாய்ந்தது.
மீண்டும் அதே பிரம்பு அடி வேறு யார்? பாட்டிதான். கருப்பு அலறிக்கொண்டு கீழே விழுந்தது. அதே வேளையில் கருப்புவின் உடல் முழுவதும் வெள்ளையின் இரத்தம் தெறித்தது. வெள்ளையின் கடைசி கதறலும் கேட்டது. வெள்ளையின் தலை கருப்புவின் முகத்திற்கு நேரே வந்து விழுந்தது. எல்லாம் முடிந்து விட்டது. வெள்ளையின் வாய் ஒரு முறை திறந்து மூடியது. கருப்பு அதை வெறித்து பார்த்தவாரே விழுந்து இருந்தது. அசையவில்லை. கோபி பதறி அடித்துக்கொண்டு அதை தூக்கினான். கையை வைத்து அதன் வயிற்றை தடவினான். அது அசையவில்லை. ஒரு மரத்தடிக்கு கீழே படுக்க வைத்தான். ஓடி போய் தண்ணீர் கொண்டு வந்து அதன் முகத்தில் தெளித்தான். உடம்பை துடைத்தான். அதன் வாயில் ஊற்றினான். அது அசையவில்லை.இன்னும் உயிர் இருந்தது.
சாப்பாடு தயாரானது. கோபி ஒரு இலையில் கொஞ்சம் சாதத்தை போட்டு குழம்பு ஊற்றினான். நாலைந்து இறைச்சி துண்டை போட்டான். அதையும் சேர்த்து பிசைந்து கருப்புவின் முகத்திற்கு நேரே வைத்தான். கண்ணை திறந்தது.
அப்போதும் எழுந்திருக்கவில்லை. இலையை வெறித்து மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தது.
பாவம் அது அறிந்து இருக்கவில்லை மனிதர்களுக்கு நாயைகளை சாப்பிட்டு பழக்கமில்லை என்று..........