மரண அழைப்புகள்-அஹமது அலி

என் வரவேற்பரையில்
இப்போதெல்லாம்
மரணம் தான் என்னை
மகிழ்வுடன் வரவேற்கிறது.!
......
வாழ்க்கையோ என்னை
விரட்டியடிக்கிறது
வலை விரித்துப் பிடித்து
என்னை மரணக் குழியில்
தள்ளப் பார்க்கிறது.!
......
விழித்துக் கொண்டே
இருக்கையில் கூட
கண்ணைக் கட்டி காட்டில்
தொலைத்து விட்டு போகிறது.!
......
அதீத சக்தியொன்று
அமைதி தருகிறேன்
வந்து விடு வந்து விடு என்று
அலையலையாய் அழைப்புகளை
அனுப்பிக் கொண்டேயிருக்கிறது.!
.....
அந்த அழைப்புகளின்
சமிஞ்ஞையில் மனம்
மரண அதிர்வுகளை
உணர்கிறது.!
......
கிலி கிளியைப் போல் பறக்கிறது
வழியில் கூட சுக வழி பிறக்கிறது
உளி அடித்தும் உடையாத மனதை
மரணம் பலியெடுத்துப் போகிறது.!
........
அசரீரி சொற்பொழிவுகள்
நிமிட இடைவெளியில்லாமல்
பொழிந்து கொண்டேயிருக்க
கொஞ்சம் கொஞ்சமாய்
மூளைச் சலவை செய்து
வாழ்க்கையின் கரை மடிகிறது
மரணம் தன் முகம் விழிக்கிறது.!
.......
இடு காடுகளைக் கடக்கும் போது
இது தான் நிரந்தர வீடென்று
இப்போது ஆணித்தரமாய் புரிகிறது
பூக்களில் பிண வாடை வருகிறது
பிணங்களில் தான் பூவாடை வருகிறது.!
......
ஒவ்வொரு நாளும்
மரணம் வந்து தாலாட்டத் தானே
உறக்கமே வருகிறது.!
.....
நானும் மரணமும்
நல்ல புரிந்துணர்வுடன்
உறவாடுகிறோம்
வாழ்க்கை தான் உறவை முறிக்கிறது.!
......
வாழ்க்கையோடு வழக்காடுவதை
மரணம் வந்து மாலை சூடும் வரை
நிரந்தரமாக நிலுவையில்
வைத்திருப்பேன்
தொடர் மரண அழைப்புகளையும்
செவி மடுப்பேன்.!
................................................................................

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (22-Mar-13, 8:52 am)
பார்வை : 163

மேலே