அம்மா !!!!! ஏன் என்னை சபிக்கவில்லை ?
எத்தனை பேர் சொல்வார்கள்
உன்னைப்பற்றி
சொல்லாதோர் பாவம் செய்தோர்
உன்னைப்பற்றி
எனக்கு தெரிந்த விதத்தில்
ஏதோ கொஞ்சம்...
ஒரு வார்த்தை தப்பாய் சொன்னாலும்
சபிப்பது மானிடர் இயல்பு
நான் உன் உள்ளிருக்கையில் - உனக்கு
எத்தனை ஏளனம் எத்தனை பேச்சு
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
ஒரு சோடி பனடோல் போட இப்போதும்
மறுக்கும் உன் குணம் தெரியும் எனக்கு
எத்தனை கலர் எத்தனை ரகம்
நீ போட்ட மாத்திரைகள்
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
ஒரு மீற்றர் யாரும் அலைக்கழித்தால்
வருகிறதே கோபம்
பத்து மாதமும் நீ எவ்வளவு தூரம் நடந்தாய் ?
வீட்டிற்கும் ஆஸ்பத்திரிக்கும்
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
இனிப்பென்றால் இன்றும் அலாதிப்பிரியம் உனக்கு
நான் வந்து விட்டேன் என்று
“இனிப்பெல்லாம் வேண்டாம்”
டொக்டரின் வார்த்தைக்கிணங்கி
நீ அவற்றை பார்க்காமலேயே விட்டாயே!
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
அது பிள்ளைக்கு கூடாது இது கூடாது
“கண்டதையும் திண்ணாத”
உன் அம்மாவின் பேச்சால்
எத்தனை சுவைகளை எனக்காய்
ருசி பார்க்காதே போனாய்?
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
வேலை செய்வதென்றால் கள்ளம் உனக்கு
சுகப்பிரசவம் வேணுமென்டா
“நல்லா வேலை செய்யுங்கோ” என்றதும்
முடியா நிலையிலும் எனக்காய்
உடல் களைக்க வேலை செய்தாயே!
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
“நல்லா நடவுங்கோ”
அது முக்கியம் என்றதும்
எனக்காய் மீண்டும் குழந்தை போலாகி
நடைபயின்றாயே
உன்னை எவ்வளவு தூரம் நடக்க வைத்தேன்
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
வயிறு குமட்டக்குமட்ட
வாளிக்கணக்கில் வாந்தி எடுத்தாயே
அதையே நினைத்துப்பார்த்து
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாயே
காரணம் யார்?
நான் தானே....
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
ஊர் சுற்றுவதென்றால் கொள்ளைப்பிரியம் உனக்கு
ஆனால் நான் வந்தேன் உன் கருவறை - பின்
நல்லதோ கெட்டதோ வீட்டிலிருந்தே
விபரம் சேகரித்தாய்
உன்னை எங்கு செல்ல விட்டேன் நான்
ஓரிடமுமில்லையே!!!
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
விதவிதமாய் உடுப்பதென்றால்
சொல்லவும் வேண்டுமா உனக்கு
எல்லாமே வெளியூர் இறக்குமதிதான்
நான் உன்னுள் வந்ததும்
பினபோமுக்கும் ஸ்மோக்கவுணுக்கும் வாடிக்கையானாய்
பிடிக்காவிட்டாலும் எனக்காய் வாங்கிக்கொண்டாய்
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
நீ எடுப்பது தான் முடிவு
எல்லாமே சரியாய்த்தான் இருக்குமாம்
நான் உன்னைச்சேரும் முன்பு
கிழடு கட்டைகள் சொல்வதெல்லாம் செய்தாயே !!!
நான் வந்த பின்பு......
உன்னை கூண்டுக்கிளியாக்கிய
ஹிட்லர் நான் தானே
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
நாட்டு வைத்தியம் நல்ல மருந்து என்று
விஷத்திலும் கொடிய மருந்தெல்லாம் குடித்தாயே
தூக்குக்கயிறு இறுக்குவது போல
தொண்டை கசக்க எனக்காய்
தூக்குமேடைக்கும் சென்றாயே
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
ஆயிரம் டோசர்கள்
மிதிக்கும் வலி தெரியுமா உனக்கு?
அதுதானம்மா
நீ பட்ட பிரசவவேதனை .........
எத்தனை வலி எத்தனை ரணம்
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
நான் உனக்கு செய்தது
வலியோ வேதனையோ அல்ல
கொடுமை
கொலை
உன்னுள் இருந்து உன்னை செய்தேனே
இராணுவ ஆட்சி
சர்வாதிகாரம்
இத்தனை செய்தும் ஒருநாள் கூட
அதற்காய்
ஏன் என்னை சபிக்கவில்லை ?
அம்மா
ஏன் என்னை சபிக்கவில்லை ?
எனக்குத்தெரியும்
என்னை வேறொரு ஜீவனாய் பார்க்கவில்லை
உன்னைக் கண்ணாடியில் பார்ப்பது போலவே
உன் விம்பமாகவே நேசித்தாய்.......
அதனால் தான்
பிள்ளைகளுக்கென்று ஒரு தினம்
இருந்ததுமில்லை இருக்கப்போவதுமில்லை
உனக்கென்றொரு தினம் இன்று...
மன்னிக்கவும் அம்மா
நான் இதுவரை சொன்னது
நான் பிறக்கும் நிமிடம்வரை தான்
இன்றுவரை நீ செய்ததை .....................?
ஆயிரம் கம்பனாலும் முடியாது .....
என்னைப்போல இலட்சம் பேர்
உயிரை பலியாய் கொடுத்தாலும்
உன் ஒருத்தியின் அன்பிற்கு ஈடாகுமா?
உயிர்ப்பலி கேட்க நீ ஒன்றும்
இரக்கமற்றவள் அல்லவே..
எனக்காய் உன்னையே தந்த
பேசும் தெய்வம்........
ஆகையால் தான்
சபிக்கவில்லையோ ?