விடியலைக் கொண்டுவா

கார்மேகம் திரளாமல்
மண்ணில் மழையில்லையே
கருவொன்று தோன்றாமல்
சொல்தல் கவியில்லையே
தாய் வார்த்தை கேளாமல்
வாழ்வில் அன்பில்லையே
தடுமாறி வீழாமல்
உலகில் வாழ்வில்லையே
வீழ்ந்தாலும் முடிவில்லை
அழுதாலும் விடிவில்லை
வீச்சாக வழி தேடுவோம்
சோர்ந்தாலே அழிவாகும்
ஓய்ந்தாலே முடிவாகும்
மூச்சாக முன்னேறுவோம்

துயரின் வலி கண்டு
துவண்டு போகாதே
வலிய கரம் தன்னில்
வளைந்து சாயாதே
அழுவதற்கல்லவே
வந்தன கண்கள்
தொழுவதற்கல்லவே
எமக்கிரு கைகள்
முடியுமா என்றொரு
கேள்வி எதற்கு
முடியும் வரையிலே
வாழ்வு எமக்கு
விடியுமா என்றொரு
ஐயம் எதற்கு
விடியலைக் கொண்டுவா
சக்தி இருக்கு

உன் மீது விழுகின்ற
கல்லெல்லாம் மலராக்கி
மாலையாய் செய்துவிடு
எதிர் நிற்கும் தடையாவும்
எதிர்கால வாழ்விற்கு
படிக்கல்லாய் மாற்றிவிடு
அடிமை ஆக்கிட
எவர் வந்த போதிலும்
அன்பாலே வீழ்த்திவிடு
அவர் வாழ்வும் நலமாக
ஆண்டவன் மீதிலே
புகழ்மாலை சாத்திவிடு

சாட்டைகள் கிழித்த
காயத்தின் தழும்பினை
வரிகளாய் ஆக்கிவிடு
வானத்து இடிதனை
வளைத்து எடுத்து வா
தாளமாய் மாற்றிவிடு
ஓயாது துள்ளிடும்
அலையோசை கொண்டுவா
ரகமாய் சேர்த்துவிடு
எங்களின் விடியலை
யாவரும் கேட்கட்டும்
பூபாளம் பாடிவிடு

என்னாகும் ஏதாகும்
துன்பங்கள் பறந்தோடும்
வாழ்வெல்லாம் ஒளியாகட்டும்
பொன்னாகும் பூவாகும்
வாழ்வெல்லாம் தேனாகும்
இன்பங்கள் நிலையாகட்டும்
நாளை வருங்காலம்
எமது வசமாகும்
நன்பிக்கை வளர்த்துவிடு
வாழ்வின் நெறியோடு
கூடும் பண்பாடு
வளர்ந்திடும் நம்பிடு
காணும் திசையாவும்
நேசம் விளைவாகும்
மனிதம் மதமாகட்டும்
புனிதம் புலர்வாகி
புதுமார்க்கம் உருவாகி
எதிர்காலம் எமதாகட்டும்

எழுதியவர் : மோகன் சபாபதி (2-Apr-13, 12:38 pm)
பார்வை : 94

மேலே