என்னைக் கொல்ல வந்த கடவுள்...

இன்று...

என்னைக் கொல்ல வந்த கடவுளுக்கும்
முகம்...
என்னைப் போலவேதான் இருந்தது.

என்னை விட...
மெலியதாய் இருந்தாலும்...
எனது மொழியில் அல்லாமல்...
வேறு மொழியில் பேசியது..அகங்காரத்துடன்.

ஆயுதம் ஏதுமற்று...
நிராயுதபாணியாய் இருந்தாலும்...
அடிக்கடி...சாதி..சாத்திரம்..என
விஷங்களைத் துப்பியது....
அதைச் சுற்றி இருந்த இடமெங்கும்.

என்னை விட...
சிகப்பாய் இருப்பதைப்
பீற்றிக் கொண்ட படியே...
தன் அழகு...அலங்காரங்களைப்
பெருமையாய் சொன்னது.

என்னைப் போல
புளித்த கஞ்சியும்...சாராயமும்
சாப்பிடுவதில்லை என்றது.
பூக்களின் வாசனை இல்லாமல்...
தூக்கமே வராது..என்றது.

அதற்குக் கிடைக்கும்...
காணிக்கை வருமானங்கள்...
எனக்குக் கிடைக்க
வாய்ப்பே இல்லை என்றது.

தனது பக்தர்களை
முட்டாள்களாய் வைத்திருப்பதைப் பற்றி...
வாய் கொள்ளாப் பெருமையுடன்
பீற்றிக் கொண்டது.

உனது பக்தனைப் போல...
எனது பக்தன்...உடுக்கடித்துக்
கேள்விகள் கேட்பதில்லை என்றது.

நான் சாராயத்தால்
கெடுத்து வைத்திருக்கும் மனிதர்களை...
அது சாதிகளால் கெடுத்து வைத்திருக்கும் பெருமையைப் பேசிற்று.

சாராயத்தை விட...
சாதியின் போதையை...
அதன் தீவிரத்தை..
பெரும் போதையுடன் பேசிற்று.

அதன் பக்தனும்..எனது பக்தனும்...
ஓரினம்...ஒரு தாய் மக்கள்
என்னும் பேச்செல்லாம்...
தன் வாழ்க்கைக்கு உதவாது என்றது.

அதற்கும்...எனக்குமே...
ஒரு சாண் வயிறுதான் என்றாலும்...
அதன் வயிறுதான்
அதற்கு முக்கியம் என்றது.

இப்படி...மரத்தடியிலும்...
பொட்டல் வெளியில் குதிரை மேலும்..
நான் அமர்ந்து கொண்டு இருப்பது
கடவுளின் குலத்திற்கே கேவலம் என்றது.

ஊர்தான்
நம்மைக் காக்க வேண்டுமே தவிர...
ஊரைக் காப்பது
நம் வேலை அல்ல என்றது.

மேலும்...இப்படி..
ஒரே ஊரில்..அதுவும் நானும்...
ஒரே தொழிலைச் செய்வதில்...
அதற்கென்ன லாபம் என்றது.

அதனால்தான்...

தன் பக்தனிடம்..
தன் ஆயுதங்களைக் கொடுத்து..
என்னைக் கொல்லும்படி
ஆணையிட்டதாய்ச் சொன்னது.

பிறகு...
என்னை வெட்டிச் சாய்த்த களிப்பில் திரும்பியபோதுதான்..

வேறொரு கடவுள்...அதன் பக்தனிடம்...
தனது ஆயுதங்களைக் கையளித்துக் கொண்டிருப்பதை..

அதுவும் பார்த்தது.

எழுதியவர் : rameshalam (5-Apr-13, 6:12 pm)
பார்வை : 101

மேலே