இது ஒரு மழை வர்ணனை...!!
கார்முகிலன் மடை திறக்க,
காயும் நிலவு உடன் இருக்க,
காற்றை சற்று உரசிவிட்டு,
மண்ணின் காதல் சேர விரையும் மாரி..
விடியும் பொழுது பிறக்கும் வரை,
இடியும் மின்னலும் கச்சேரி முழங்க,
ஈரக் காற்றை மணந்து முடித்து,
நிலமெனும் புகுந்த வீட்டை அடைந்தவள் நீயோ..
வான் முத்து வேகம் விரைந்து,
வரும் வழியில் சிறகு ஒடிந்து,
வீசும் காற்றில் வழி மறந்து,
வீழும் இங்கே மண்ணை நனைத்து..
விண்ணும் மண்ணும் காதல் கொண்டு,
அவை சேரா நிலையால் கலக்கம் கண்டு,
வான் வடி கண்ணீர் இம்மாரி தானோ,
நிலையாய் சேரா விடின் மும்மாரி தானோ..
மாரி நீயும் வேசி தானோ,
ஒருவன் மட்டும் துணைவன் அல்ல,
பலர் தேகம் தொட்டு நனைத்திடவே,
பாவி உன் உடலை மரித்தாயே..
மண்வாசம் தனை நாம் அறிந்திடவே,
மாரி தன்னை மரித்ததுவே,
மண்ணை அடைந்து, மூச்சை இழந்து,
மாண்டு மக்கிப் போனதுவே..!!