வலிகள் விற்பனைக்குஅல்ல

யானை இருந்தாலும்
ஆயிரம் பொன்
இறந்தாலும்
ஆயிரம் பொன்னாம்...

இதனை மிஞ்சுகிறது
என்னுடைய மதிப்பு

இருப்பதினால்
என் சம்பள வரவு

இறந்துவிட்டாலோ
அலுவகத்திலிருந்து
அத்தனை வரவும்...

நான்
விபத்தில் அடிபட்டாலும்
ஆயிரம்பொன்னாய்...

கொட்டிய குருதிக்கும்
சேதப்பட்ட
என் எலும்புகளுக்கும்
சிரசினுள் புகுந்துவிட்ட
நோயறியா வலிகளுக்கும்
சிந்திய கண்ணீருக்கும்
இழப்பீடாய்.... காப்பீடு...

முன் நிறுத்தப்படுகின்றேன்
நீதிபதி முன்னிலையில்..
வலிகள்
விலை பேசப்படுகின்றன
வழக்காடு மன்றத்தில்....

என் வலிகளை
குறைத்து மதிப்பிடுகிறார்
எதிர் தரப்பு வழக்குரைஞர்
காப்பீட்டு நிறுவனத்திற்கு
செலவினங்களை குறைக்க...

என் வலிகளை
அதிகம் மதிப்பிடுகிறார்
என் வழக்குரைஞர்
வழக்குக் கட்டணத்தை
எங்களிடத்தில்
வந்தவரை வசூலிக்க...

முன்னதாக பேரம் நடந்ததா??
இல்லை
பேசி முடிவெடுக்கப் பட்டதா???
கணிசமான விலைக்கு
என் வலிகள் விலைபோனது
தீர்ப்புகள் சாதகமானதில்
குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி....
வழக்குரைஞருக்கும்தான்...

வந்த காப்பீட்டுத் தொகையை
ஆளாளுக்கு
பங்கிட்டுக் கொண்டனர்
என்னை விடுத்து...

விலை போன
வலிகள் மட்டும்
இன்னும் என்னிடத்தில்
யாரும்
எடுத்துக் கொள்ளப்படாமலேயே....

மனம்
சமாதானப் பட்டுக் கொள்கிறது
என் மதிப்பு
யானையின் மதிப்பைவிட
ஒரு படி மேலாய்.... .
உண்மைதானே
உரைத்திடுங்கள்..!!!!!.

எழுதியவர் : சொ. சாந்தி (6-Apr-13, 4:44 pm)
பார்வை : 9032

மேலே