சவப்பெட்டி கனக்கவில்லையா? (அக்னிக்குஞ்சுகள்-2)
கிழக்கில் சூரியன்
உதிக்கவில்லையா?
எங்கள் சூரியன் உதித்தால்
எதிரியின் கிழக்கு
சாம்பலாகும்!
கண்ணீரின்
கனமழையா?
சரித்திரம் ஒன்று
தன் கடைசி
மூச்சினை இழந்தது...
கையெழுத்துகளின்
அடைமழையா?
கைநாட்டு
ஒப்பந்தமும்
காலாவதியாகியது!
வாக்குப்பெட்டிக்கு
வலிக்கவில்லையா?
என்விரல்
எதுவென்று
எனக்கே தெரியாது!
சவப்பெட்டி
கனக்கவில்லையா?
எங்கள் நிலத்தை
யாரால் சுமக்க
முடியும்!
காணிநிலம் எங்கே?
ஆடையைக் கூட
அடகுக்காரன்
பறித்து விட்டான்.....
ஏனிந்த இரத்தக்கறை?
என் தேசியக்கொடி
இரு கூரிடப்பட்டது...
உணவு வேண்டுமா?
வேண்டாம்.
நீ கடித்த
கடைசி யெலும்பு,
குழியில் தோண்டப்பட்டது!
பசிக்கவில்லையா?
நிலாச்சோறு திங்க
ஏங்குகிறோம்
நிலவிலும் குண்டு
விழுகிறதாம்!
நீங்கள் என்ன சாதி?
விடை தேடுகிறது
அக்னிக்குஞ்சுகள்.....
தொடரும்....