..........உனக்கான தேடலில்.............
எங்கும் எதிலும் கலந்துகிடந்த மனம்,
எங்கேயாவது எப்போதாவது தட்டுப்படுமா?
என்று வார்த்தைகளில் விளிக்கையில்,
விம்மி விழுகிறது இடைப்பட்ட ஒரு,
நெடும்பயணத்தின் விஸ்தீரணம் !
அங்கே !
நிழலோடு கலந்துகிடந்தும்,
நினைவோடு நடந்துபழகியும்,
தவறிழைத்தால் நேரெதிரே மோதியும்,
பகைமைசூழ புறந்தள்ளி முன்னே நின்றும்,
பசியென்றால் கடன்வாங்கி ஊட்டியும்,
தவறுக்கு கோபித்தால் கெஞ்சிக்கூத்தாடியும்,
நோய்பட்டால் விரைந்து சுமந்தோடியும்,
நிராகரிக்கப்படின் அள்ளியணைத்து அரவணைத்தும்,
பொறாமையில்வீழ்ந்திடின் தெள்ளியநீரில் அலசியும்,
நொந்துபோய் அழுதால் தானும் பதறியும்,
அடிதடிக்கு கிளம்பிடின் அருகேதோள் உரசியும்,
அடிபட்டு வருங்கால் சினங்கொண்டு கர்ஜித்தும்,
அருகே நடமாடிய உயிர்போன்ற நட்பு,
கண்களுடைத்து கவிதையாய் விரிகிறது காட்சிகளில்,
அடேய் நண்பா......................
எங்கு போனாய் நீ?
எப்படி நீயில்லாது நான்?
நேசிப்பை சுவாசித்து கற்றுத்தந்தவனே !
அமிழ்கிறேன் உன் அலைகளின் அழகில் !
நனைத்து இணைக்கும் பெருங்கடலன்றோ நட்பு !!