சொல்வதெல்லாம் உண்மை.... நம்பிவிடு

காதல் சாயம் பூசி விட்டு,
காமக் காயம் ஆக்கிச் செல்வான்,
நம்பு என்னை நாணயன் நானடி,
கைவிட மாட்டேன் கரம் பிடிப்பேன் என்பான்..
சொல்வதெல்லாம் உண்மை நம்பிவிடு..

வாக்களித்து வெல்லச் செய்,
உறுதி வாக்கின் மீது நம்பிக்கை வை,
வாழ்க்கைத் தரம் உயரச் செய்ய,
விழிப்புடன் உழைப்போமென்பான்..
சொல்வதெல்லாம் உண்மை நம்பிவிடு..

ஐந்து லட்சம் பணம் கொடு,
அயல்நாடு இனி உந்தன் வீடு,
வஞ்சப் புகழ்ச்சி வாய் வழி வழிய,
வெளிநாட்டு வேலை வசம் உள்ளதென்பான்..
சொல்வதெல்லாம் உண்மை நம்பிவிடு..

பழம் பச்சையாய்த் தோன்றியும்,
பழுத்தது என்பான்,
வெளி பார்க்கத்தான் அப்படி,
உள் இளஞ்சிவப்பு தான் என்பான்..
சொல்வதெல்லாம் உண்மை நம்பிவிடு..

மழலை உனக்கு, உணவூட்ட,
மனதில் சிறிது பயன்காட்ட,
பூச்சாண்டி வருது, சாப்பிடு என்பாள்..
அவள் சொல்வதெல்லாம் உண்மை நம்பிவிடு..

உடன் சேர்ந்து தொழிலமைத்து,
ஊரில் பெரிய ஆளாவோமென்று,
பணத்தைத் தொழிலில் புகுத்திவிடு,
பல மடங்கு பிறகு பெருக்கிவிடு என்பான்..
சொல்வதெல்லாம் உண்மை நம்பிவிடு..

காதல் மயக்கந்தன்னில்,
கட்டழகு தேக மோகந்தன்னில்,
கடை வரை உடனிருப்பேன்,
காதல் மழை பொழிந்திருப்பேன் என்பான்..
இவன் சொல்வதுமெல்லாம் உண்மை நம்பிவிடு..

நரிகள் திரியும் காடிது,
சொல்வதையெல்லாம் நம்பினால் வாழ்விறாது,
பகுத்தறிவை வளர்த்துவிட்டு,
நம்பும், நம்பக் கூடாதவையைப் பிரித்தறிவோம்..

இப்போது சொன்னதெல்லாம் உண்மை,
நம்பிவிடு...!!

எழுதியவர் : பிரதீப் (11-Apr-13, 1:34 am)
பார்வை : 319

மேலே