பாதை ஓரங்கள்

விரிந்து செல்லும் பாதைகள்
புதிது புதிதாய்
எந்தெந்த ஊருக்கோ செல்கின்றன.

எந்த ஊரோ என்ன பேரோ
முகவரி இல்லாத மனிதர்கள்
இவர்கள்
பாதை ஓரத்தில்
பசித்துக் கிடக்கின்றனர்.

வழி நடந்து களைத்தவர்கள்
சாலையோரத்து மரத்தடியில்
வருவார்கள் மர நிழலில்
இளைப்பாருவார்கள்
மரத்தடியும் மர நிழலும்தான்
இவர்கள் வாழ்வுக்கே அடைக்கலம்

சாலை ஓரத்து சுதந்திரக் காற்று
நாளும் எழுதும் சரித்திர பக்கங்களில்
"நாளை மலரும் உங்கள் வாழ்வு "
என்ற அடிக் குறிப்பு இவர்களுக்கு
அரசியல் தந்திருக்கும் உத்திரவாதம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Apr-13, 5:53 pm)
பார்வை : 69

மேலே