கடவுள் எழுதிய கவிதை நீ..!

என்னென்று சொல்வேன் பெண்ணே
நின்னழகையெழுதிப் பார்த்திடவோ கண்ணே!

கண்ணென்று சொல்லிவிட்டால்
கவிநயம் வந்து விடுமோ?

கருநாவல் பழமென்றால்நின்
கண்ணுகுவமையாகி விடுமோ?

மண்டியயிருள் காடோயிவள் கூந்தல்
அண்டிய பறவைகள்தாமோ சூடிய பூக்கள்

பால்வீதியில் பவளம் பரப்பிய நெற்றி
கோளனுப்பி ஆராய கிடைக்காதோ வெற்றி

வெட்டிய நகமோயிரு புருவம்
ஒட்டிய கருமையோயிரவின் உருவம்

செங்காந்தள் மலர்தாமோ செவிமடல்கள்
செவிகொண்டு சேர்க்காதோயென் கவிமடல்கள்

பலாச்சுளையோயிவள் மூக்கு
உலா போய் வருதே உயிர்மூச்சு

தாமரையிலையோ யிவள்கன்னம்
அமரத்துடிக்குதோ "பரு" வெனும் சின்னம்

ஆரஞ்சுச்சுளையோ யிவளிதழ்கள்
ஆராய்ந்து சொல்லவோபல சுவைகள்

செப்புச்சிலையோ நின்னங்கம்
அப்பிய மஞ்சளோ நிகர்தங்கம்

பச்சை மூங்கிலோயிவள் கைகள்
பன்னீர்பூக்கள் பத்துமிவள் விரல்கள்

மின்னல் கீற்றோயிவளிடை
தென்றல் காற்றோயிவள் நடை

தேன்சிட்டு சிருங்காரமிவள் சிரிப்பு
தேன்சொட்டும் பேச்சேயிவள் சிறப்பு

ஒவ்வொன்றாய் உன்னழகை சொல்ல
ஓர் கவிதை போதாது பெண்ணே.!

ஓரே வரியில் சொல்கிறேன் கேள்....
"கடவுள் எழுதிய கவிதை நீ..! "

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (12-Apr-13, 9:02 am)
பார்வை : 237

மேலே