தண்ணிலவு சுடுமா - நேரிசை வெண்பா
நந்திக் கலம்பகம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள சொக்கநாதப் புலவர் எழுதிய ஒரு நேரிசை வெண்பாவை வாசிக்க நேர்ந்தது. இப்பாடலில் தலைவனைப் பிரிந்த தலைவி விரகதாபத்தில் தவிக்கிறாள். இரவு நேரம். பௌர்ணமி நிலா. அது சில நேரங்களில் இளங்காதலர்களிடம் நல்ல பெயர் எடுக்க முடிவதில்லை.
தலைவனைப் பிரிந்த பிரிவாற்றாமையால் குளிர் நிலாவும் தன்னைச் சுடுவதாக உணர்ந்து, தன்னைப் போல மற்ற இளம் பெண்களையும் நிலா சுடுமோ என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறாள்.
இப்போது பாடலைப் பார்ப்போம்.
இரு விகற்ப நேரிசை வெண்பா
‘ஊரைச் சுடுமோ உலகம் தனைச்சுடுமோ
ஆரைச் சுடுமோ அறிகிலேன் - நேரே
பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த
நெருப்புவட்ட மான நிலா’.
இதே பாடல் வேறு சில பதிவுகளில் கீழே உள்ளபடி இருக்கிறது.
"ஊரைச் சுடுமோ உலகம் தனைச்சுடுமோ
ஆரைச் சுடுமோ அறிகிலேன் - நேரே
பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீர் இந்த
நெருப்புவட்ட மான நிலா."
பதவுரை:
பொருப்பு - மலைத் தொடர்ச்சியில் அமையப்பெற்ற மலை முகடு ஒத்த
நேரே – நேராக திரட்சியுடன் கூடிய
வட்டமான முலை - வட்டமான இரு மார்பகத்தை உடைய
பூவையரே - பூப்போன்ற மென்மையான பெண்களே
(பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீர் - மலைத் தொடர்ச்சியில் அமையப்பெற்ற மலை முகடுகளை ஒத்த, வட்டமான இரு மார்பகத்தைத் தாங்கி நிற்கும் கொடி போன்ற இடையையுடைய பெண்களே)
நகில் – பெண்ணின் மார்பகம்
இந்த நெருப்பு வட்டமான நிலா. - என்னைச் சுடும் தன்மையுடைய வட்டமான இந்த நெருப்பு நிலா
ஊரைச் சுடுமோ - என்னைச் சுடுவது போல, இந்த ஊர் எல்லாம் சுடுமோ (என்றால் இந்த ஊரில் உள்ள மற்ற இளம் பெண்டிர் எல்லோரையும் என்று பொருள்)
உலகம் தனைச்சுடுமோ - இந்த ஊர் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து பெண்டிர்கள் எல்லோரையும் சுடுமோ?
யாரைச் சுடுமோ அறிகிலேன் - யாரை எல்லாம் சுடுமோ என எனக்குத் தெரியவில்லையே
கருத்துரை:
’மலைத் தொடர்ச்சியில் அமையப்பெற்ற மலை முகடுகளை ஒத்த, நேராக திரட்சியுடன் கூடிய, வட்டமான இரு மார்பகத்தைத் தாங்கி நிற்கும் கொடி போன்ற இடையையுடைய பெண்களே!’
’வானிலிருந்து என்னை நெருப்பாய்ச் சுடும் தன்மையுடைய வட்டமான இந்த நெருப்பு நிலா என்னைச் சுடுவது போல, இந்த ஊரில் உள்ள மற்ற இளம் பெண்டிர் எல்லோரையும் சுடுமோ! இந்த ஊர் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து பெண்டிர் எல்லோரையும் சுடுமோ? யாரை எல்லாம் சுடுமோ என எனக்குத் தெரியவில்லையே!’ என்று தனக்குத்தானே பிரிவாற்றாமையால் புலம்புகிறாள்.
முடிவுரை:
வெண்பாக்களின் இரண்டு அமைப்புமே இலக்கணப்படி சரியாக இருந்தாலும், நகிற் பூங்கொடியீர் என்ற சொற்றொடர் நளினமாகவும், அழகாகவும் இருக்கிறது.
செயற்கை உரங்களின்றியும், கலப்படமும் இல்லாத உண்ணும் உணவு, தூய்மையான சுற்றுப்புறம், தென்றல் காற்று வீசும் சோலைகள் ஆகிய சூழ்நிலைகளால் அக்காலப் பெண்களின் ஆரோக்கியமும், பருவ வளர்ச்சியும் எவ்வாறு இருந்தது என்பதும் இப்பாடலின் வாயிலாக நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.