நகரத்திலிருந்து கிராமத்திற்கு
மண்வாசனை இது கிராமங்களின்
மரபு கெடாமல்
அதன் இயல்பை விடாமல்
மிகைமிஞ்சி மீதமிருப்பது
நகர போர்வைக்குள்
நான்கு சுவருக்குள்
அடைக்கப்பட்ட என் இதயத்தில்
மண்வாசனை பரப்பிவிடுகிறது
எனது கிராம நினைவலைகள்
கிராமம் மாறி நகரம் ஏறி
வந்த எனக்கு
தூரமாய் சிறு தூரலாய் ஒதுக்கிபோகிறது
எனக்கும் எனது கிராமத்திற்குமான தொடர்பு
நகரத்தில் மழை
என்னை நனைக்க மறுத்தது
அப்போது நான் நிழல் குடையின் கீழ்
நின்றது கூட காரணமாய் இருக்கலாம்
அன்று கிராமத்திற்கு செல்லும் போது
கோபமாய் நனைத்து போகிறது
நகரத்தில் நான் சேமிக்க தவறிய
சின்னம்சிறு மழைத்துளிகள்
தென்னைமர கீற்றில்
சடசட சத்தத்துடன்
அணில்கள் ஓடிய போது
தடதடவென கடக்கும்
ரயில் வண்டி தடத்தில்
தினம் நான் தொலைந்துவிட
போவதாய் ஒரு படபடப்பு
வண்ணத்து பூச்சிகளை
நகர பூங்காக்களில் நான் தேடியபோது
அது கிராமத்தில் மல்லிகை தோட்டத்தில்
தேன் அருந்திவிட்டு இளைப்பாரியிருக்கலாம்
காலை பொழுதுகளில்
கதவு தட்டும் சூரியனும்
அதை வரவேற்க்கும்
பறவைகளின் சத்தமும்
ஆறு மணி அலாரம்
அலறும் போது மறந்திருக்கலாம்
வாகன நெரிசலால்
வரும் எரிச்சலின் போது
அமைதி சூழ அன்று
இலை உதிரும் சத்தத்தில்
இமை மூடி தூங்கியதில்
இரண்டு மணி நேர மின் வெட்டை
இருநோடியில் கடந்ததாய் நினைவு
கடினப்பட்டு கொள்கிறது காதுகள்
பாசமும் பரிவான வார்த்தைகளும்
என் வாய் கூட பேச
மறந்துவிட்டதை எண்ணி
இந்த நகர வேஷம்
எனக்கு பொருந்தவில்லை
ஒவ்வொரு நாளும் என் நாவில்
விஷம் தடவி போகிறது
நகரத்து வாழ்க்கையை
தூக்கி எரிந்து
கிராமத்தில்
தூங்கி எழுவதே மேல்
என்று தோன்றுகிறது
கிராமங்கள்
நகரத்தை நோக்கி இழுக்கபடுகிறது
மனமோ
நகரத்திலிருந்து கிராமத்திற்கு
விரைந்தோட பார்க்கிறது
நேற்று போல் இன்று இல்லை
அந்த நேற்று இல்லையென்றால்
இன்றில் வரும் துன்பத்தை
துடைபதற்க்கு கைகள்
இல்லாமல் ஏங்கிருப்பேன்
அந்த பசுமைதான்
இன்றைய என் வறட்சிக்கு
தண்ணீர் தெளித்து போகிறது
மீண்டும் விடுமுறை என்ற
விடுதலை வரும்
ஓர்நாள் என்றாலும்
சுதந்திரமாய் சுற்றி வருவேன்
என் கிராமத்தை.......