நண்பர் கூட்டம்.. பிரிந்த சோகம்
உணர்வுகளில் தவழ்ந்து
உரிமையில் பிறழ்ந்து
உயிரான உறவுகள்
உடைவதும் எங்கே??
பள்ளியிலும் கல்லூரியிலும்
பாடம் கற்காத போதும்,
எள்ளியிலும் நகையிலும்
கூத்தாட கூட்டம் சேர்ந்தது.... நண்பரென்று
உயிருள்ள வரையில்
தொடுதலில் இருப்போம்,
அது போன பிறகு
நரகத்தில் கூத்தடிப்போம்..
சொன்ன வார்த்தைகள் சென்றதெங்கே??
பழகிய நாட்களெங்கே,
தோள் படர்ந்த உன் கரங்களெங்கே,
வெட்டிப் பேச்செங்கே,
வலித்த காதலெங்கே,
சண்டைச் சொல்லாடிய வார்த்தைகளெங்கே,
வெட்டியாய் அல்லாடிய கால்களெங்கே,
திருடிய பேனா எங்கே,
நம்மைத் திருத்திய தண்டனை எங்கே,
நம் தேநீர்க் கடை எங்கே,
திகட்டாத வெறுமை எங்கே..
பகடிக் கூத்துக்கு பல்லிளித்த நாமும்,
படித்து முடிக்க அடித்த ஆசானும்,
படங்கள் வரைந்த வகுப்பு மேஜைகளும்,
பாடங்கள் பல படித்த வகுப்பறைகளும்
எங்கே எங்கே சென்றது எங்கே..
இங்கே நண்பரெல்லாம் தனித்திருக்க,
நாட்கள் ஒவ்வொன்றாய் கழிந்திருக்க,
சென்ற நாட்கள் திரும்ப வருமா,
செய்தி கேட்டு சொல்லு வீசும் வளியே..!!!