தனித்துவம் !!
இறைந்து கிடக்கும் விண்மீன்களை
இருண்ட வானம்
பதுக்கி வைப்பது இயல்பாகிறது
கதிர் முற்றிய வயலை
வந்த சுவடு தெரியாமல்
மேய்ந்து போவது தொடர்கிறது
குற்றுயிருடன் நகரும் பாம்பை
குறிவைத்து எறிந்த கற்குவியல்
மலையாவதில் குறைவில்லை
திரும்பத் திரும்ப வரும் அலைகள்
உணர்வுக் கரையை தழுவிச் சென்றாலும்
முகம் காட்ட விருப்பமில்லை
எதிர்பாராத மழையில்
நனையும் சுகம் நீடித்தாலும்
உலர்த்திக் கொள்ளுவதிலேயே கவனம்
நெருங்காத ஒளிப் புள்ளிகளை
புறந்தள்ளிவிட்டு புத்தொளி குன்றாது
பயணிக்கிறது
நிலவு !