பெண் பார்க்க வருகிறார்கள் !

அலுவலகத்தில்
அனுமதி கேட்டு
விடுப்பு எடுத்து
ஏதோ ஒரு பிற்பகலில்
ஏதோ ஒரு மாலையில்
ஒப்பனையுடன் காத்திருக்கிறேன்
ஆம் இவர்கள் பெண் பார்க்க வருகிறார்கள்
தட்டில் காபியுடன் புன்சிரிப்புடன்
ஒரு விருந்தோபசாரம்
வீட்டுத் துறையில் மனைவியாய் நியமனம் பெற...
சில கேள்விகள் சில பதில்கள்
நெஞ்சினில் நினைவுகளின் நிறமாலை
மறுநாள் காலையில் கன்னத்தில் கண்ணீர் கோலம்

பத்துப் பேர் இதுவரை பார்த்தாகிவிட்டது
இன்று வருபவன் பதினோராவது மனிதன்
மணமேடைக் கனவுகள் புதிய ஒப்பனையுடன்
புது வினா விடைகளுடன் தயாராக நான்
கடவுள் படத்திற்கு முன் கண்மூடி கைகூப்பி
இதுவாவது முடிய வேண்டுமே இறைவா
என்ற வேண்டுதலுடன் அம்மா
இருப்புக் கொள்ளாமல் குறுக்கும் நெடுக்கும்
நடந்து கொண்டிருக்கும் அப்பா
இதோ வாசலில் ஏதோ காலடிச் சத்தம்
ஆம் அவர்கள் பெண்பார்க்க வருகிறார்கள் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (23-Apr-13, 4:32 pm)
பார்வை : 85

மேலே