தமையன் அல்ல இவன்
உறவுகள் பலருண்டு எனக்கு - இவன்
அதில் தமையனென வந்தான் - என்
தமையன் அல்ல இவன்...
விரல் நீட்டி வித்தைகள் செய்வான் - என்
தலைமீது கொட்டுகள் வைப்பான் - என்
தமையன் அல்ல இவன்...
ஆத்திரம் கொண்டு முறைப்பான் - பின்
மீசைக் குழந்தையாய் சிரிப்பான் - என்
தமையன் அல்ல இவன்...
கவலை மறக்கச் செய்தான் - தன்
கடமை எனக்குச் செய்தான் - என்
தமையன் அல்ல இவன்...
பள்ளிக் கல்லூரி எனக்கு - பல
இன்னலுக்கு இடையிலும் தந்தான்- என்
தமையன் அல்ல இவன்...
சொல்லிக் கொண்டுத் திரிகிறான் - இவளென்
செல்லத் தங்கையென ஊரில் - என்
தமையன் அல்ல இவன்...
எஞ்சிக் கிடக்கும் நாட்களெல்லாம் - இங்கு
கெஞ்சிக் கிடப்பேன் நான் - இவன்
நெஞ்சில் குழந்தையாய் குடி கொண்டிடவே...
ஆம் என் தமையன் அல்ல இவன்
என்
தந்தையானவன்...