என் கிராமத்து கோடை விடுமுறை

பள்ளி தாண்டிய
சுதந்திரம் அது
எல்லை தாண்டும்
கோடை விடுமுறை இது

பச்சை குதிரை தாண்ட
பாலாய்போன பழைய
கால்சட்டை ரெண்டாய் கிழிய
மானம் காக்க மேல்சட்டை
இடுப்பைதாண்டி கீழிறங்கும்

கில்லி அடித்து
மண்டை கிழிய
மறுநாள் காயம் பட்ட
கட்டு பிரிக்காமல்
எட்டி அடிக்க
கில்லி எகிறி பறக்கும்

பல்லாங்குழியில்
பறிகொடுத்த
புலியங்க்கொட்டையெல்லம்
பள்ளிக்கூடத்தில் வராத கணக்கை
சொல்லாமல் சொல்லி கொடுக்கும்

புட்டு அடித்து
சிதறிய ஒட்டாச் சில்லுகளை
தேடியும் ஓடியும்
சின்னதாய் ஒரு படபடப்பு
வரிசையாய் அடுக்கி முடிப்பதற்குள்

பச்சை தொட்டு
விளையாட நண்பனின்
குச்சியில் எச்சில் தொட்டு
தொடக்கி வைப்போம்

கண்ணாம்பூச்சி ஆட
ஒன்னாங்குலி
என்ற சத்தம் வரும் வரையில்
பதுங்கிருப்போம்
ராணுவ வீரனை போல்

காசிக்காய் பிடித்து போக
ஆண் பெண் பேதம் மறந்து
கூடி மகிழ்வோம்

கிச்சுகிச்சு தாம்பாளத்தில்
ஈக்கம் சீகு ஒழுச்சு வச்சு
சுடு மணலும் பார்க்காமல்
சுகமாக தேடுவோம்

மதிய வெயிலில்
மாரியம்மன் குளத்தில்
மீனுக்கு தூண்டில் போட்டு
நீந்தியே குளத்தை கலக்கி
தாமரை பூ திண்று பசியாறுவோம்

பருத்தி வெள்ளை பஞ்செடுத்து
காது மூக்கு கண்ணும் வைத்து
காற்றிலே பறக்கவிட்டு
கால் கடுக்க கூடி பிடித்து
இளைப்பாற இலவ மரம் தேடுவோம்

பனைமரம் ஏறி
நொங்கு வெட்டி
வயிறு நிறைய குடித்துவிட்டு
பனங்காய் வண்டியில் ஊர்சுத்தி
வீடு வந்து சேருவோம்

தாயம் உருட்டியே
எங்கள் வீட்டு திண்ணை
பள்ளமாய் போக
பாட்டி திட்டு
படி தாண்டி கேட்கும்

ஆலமரத்தடியில்
ஆளுக்கொரு விழுதில்
ஊஞ்சல் ஆடும்
தூக்கனாக்குருவிகள் ஆவோம்

தென்னை கீற்று
காத்தாடி பறக்கவிட்டு
தெருவை சுற்றும்
பருந்துகள் ஆவோம்

பிள்ளையார் கோவில் கட்டி
கூட்டாச்சோறு ஆக்கி வைத்து
வாழைமர திருமணம் செய்து
வரபெங்கும் ஊர்வலம் போவோம்

நகர போர்வை
வாடகை வீடு
திறக்காத ஜன்னல்
மணக்காத சமையல் அறை
சுருட்டாத படுக்கையில் படுத்துக்கொண்டு
தூசு தட்டி பார்த்தேன்
எங்கள் ஊர் கோடை விடுமுறையை
பெருமூச்சு விட்டுக்கொண்டே....

எழுதியவர் : பாலமுதன் ஆ (30-Apr-13, 7:52 pm)
பார்வை : 689

மேலே