திரிந்த உறவுகள்
சித்தப்பா !!!!!!!
வாய் வரை வந்து விட்டு
எச்சில் கூட்டி முழுங்கி விட்டேன்
கண்டதும் "மக்களே" என்றழைத்து
கட்டி அணைத்துக் கொள்வார்,
கைநிறைய கமர்கட்டும் தேன்முட்டாயும்
என்னைப் பார்த்தாலும்
புன்முறுவலே செய்ய வில்லை
சித்தி திட்டுவாளாம் என்னையா அவரையா ?
ஊரெல்லாம் வந்திருந்தும்
விமர்சையாய் விருந்து வைத்தும்
அப்பா அழைத்திருந்தும்
அக்கா கல்யாணத்திற்கும் வரவில்லை
பாக பிரிவினை செய்தாயிற்றாம் ...
கொல்லையில் மாமரம் மட்டும் பிரிக்கவில்லை
வரப்பிலே இருப்பதனால் இருவருக்கும்
பாதி பாதி ...
ஒரு நாள் உச்சிகொம்பில் ஏற தெரிந்த எனக்கு
இறங்க தெரிய வில்லை
அம்மா என்று கத்தவில்லை
சித்தப்பா !!!!!!!
இருகிளைகளிலும் ஒரே கனிதான்
அன்புக்கும் வரப்புண்டோ
என்னையும் பிரிக்காதீர்
வேண்டுமென்றால்
கொல்லையிலே இருந்து கொள்கிறேன் .