தமிழா! என் தமிழா!

அறிவினில் உயர்ந்தோம்
அனைத்திலும் திறம்பெற்றோம்
அறிவில் குறைந்தோரிடம்
உழைக்கும் அடிமையானோம்!
பிழைக்கின்ற வழிதேடி
பறந்தோம் பிறநாடுகளும்
இருக்கின்ற இடந்தனையே
இழந்து துடிக்கின்றோம்!
சொந்த மண்ணிலோ
சொந்தங்களை இழக்கின்றோம்
மாற்றான் மண்ணிலோ
மானம் தொலைக்கின்றோம்!
உயிர்களை இழந்தும்
உரிமைகளை பெறவுமில்லை
உணர்வுகளை இழந்தும்
உடமைகளை பெறவுமில்லை!
வசிப்பதற்கும் உண்பதற்கும்
கையேந்தி பெறுகின்றோம்
இலவசப் பிச்சைகளோடு
இச்சையாக வாழ்கின்றோம்!
யார் உழைப்புஇது,
பிச்சைகள் எதற்காக?
ஏன் பெறவேண்டும்,
இவர்களிடம் கையேந்தி?
முதலிடம் வந்ததெல்லாம்
முன்னொரு காலமது!
அடிப்படை தேவைகளுக்கே
அவதிப்படும் காலமிது!
அவர் செய்வாரென்று
வணங்கி நின்றோம்
இவர் செய்வாரென்று
வாழ்த்தி நின்றோம்
அவருக்கும் இவருக்கும்
அடிபணியும் இனமானோம்
அவரவர்கள் போகத்திற்கு
அரியணை கொடுத்தழிந்தோம்!
உருப்படியாய் உருப்பட
உகந்த வழியொன்றுமில்லை
ஊரையடித்து உலையில்போட
திட்டங்கள் பலஉண்டு!
தண்ணீருக்கு வழியில்லை
மின்சாரம் வருவதில்லை
விளைநிலங்கள் தொடர்ந்துகாயும்
வேலைநேரம் வீணாய்ப்போகும்!
எதனையும் பார்த்திருப்போம்
எதுவந்தாலும் ஏற்றிருப்போம்
என்று கிடந்தே
எல்லாம் இழக்கின்றோம்!
போலிகளும் ஊழல்களும்
சுரண்டிதின்ற முதுகெலும்பை
காக்கைகளும் கழுகுகளும்
கொத்துமோசை கேட்கவில்லையா?
மானமுள்ள தமிழினமே!
மனதை புதைத்தாயோ?
வீரமுள்ள தமிழினமே!
வாட்களை விற்றாயோ?
உன் பிள்ளைகளாவது
வாழ வழிகிடைக்கட்டும்
இனிவரும் தலைமுறையாவது
உணர்வோடு பிறக்கட்டும்!