சின்ன சின்ன ஆசை

சின்ன சின்ன ஆசைதான் எனக்கும்
தேங்கிய நெஞ்சில் நீங்கிடா தாக்கம்
உள்ளவரை என்றும் எழுதிட ஆசை
உலகமும் அதனை படித்திட ஆசை !
புள்ளிகள் இல்லா எழுத்து தளமும்
புவியில் எழுத்தே முதலாக ஆசை !
அமைதியே நிலவிட என்றும் ஆசை
அரசியலே இல்லாத அகிலம் ஆசை !
மோதலே இல்லாத தளமாக ஆசை
மோகன ராகமே ஒலித்திட ஆசை !
ஏமாளிகள் இல்லாத சமூகம் ஆசை
ஏய்ப்பவர் எல்லாம் மறைந்திட ஆசை !
காதல் தோல்வியே கண்டிடாத உலகில்
காதலர்கள் நிலையாய் வாழ்ந்திட ஆசை
சாதிமதமே அறியாத அகிலம் ஆசை
சச்சரவில்லா சமுதாயம் காண ஆசை !
கலவரமில்லா பூமியை காண ஆசை
கட்டணமில்லா கல்விச் சாலைகள் ஆசை
ஏழைகளும் கற்றிட என்னோட ஆசை
ஏற்ற தாழ்வில்லா சமூகம் காண ஆசை !
ஊழலே இல்லாத தேசத்தை காண ஆசை
உலகில் பாரதம் வல்லரசாக மாற ஆசை !
ஒற்றுமை உணர்வு ஓங்கிட எனக்கு ஆசை
வறுமையே இல்லாத இந்தியா காண ஆசை
மறைந்த வயல்களை கண்டிட ஆசை
புதைந்த பண்பாட்டை மீட்டிட ஆசை
மின்வெட்டே இல்லா ஒளிமிக்க தமிழகம்
நிலையாய் இருந்திட நீண்டநாள் ஆசை !
அளவான இதயத்தில் அளவிலா ஆசை
இன்னும் சொல்வேன் ஆசைகளை நானும்
அயர்ந்து போவீர் கண்டிடும் நீங்களும்
இதுவே நடந்தால் மகிழ்ந்துப் போவேன் !
பழனி குமார்